Tuesday 25 February 2020

தூரத்து கோபுரம்

தூரத்துக் கோபுரம்

அந்த விடியற்காலையில், கும்பகோணத்து மாமா, மாயவரத்திலிருந்து சித்தியும், சித்தப்பாவும், இன்னும் அப்பாவின் உறவினர்கள் பலரும் வந்திருந்தார்கள். அம்மா முந்தானையை இழுத்துப் போர்த்தி, யானை மண்டியிட்டு உள் வீட்டு வாசப்படியில் அமர்ந்திருந்தாள். கண்கள் தரையை வெறித்தபடியிருக்க, கண்ணீர் மூக்கின் ஓரமாக வழிந்து மூக்குத்தியின் கீழ் முத்து போல தொங்கிக்கொண்டிருந்தது. மாயவரத்து சித்தி விசும்பிக்கொண்டிருந்தாள். கும்பகோணம் மாமா எதையோ பறிகொடுத்தவர் போல தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார். அவரை முறுக்கு மீசையும் முரட்டு  பார்வையாக மட்டும் பார்த்தவன் நான். மற்றவர்களிடம் பதட்டமான அமைதி நிலவியது. ஏதோ அசம்பாவிதம் என்று மட்டும் எனக்குப் புரிந்தது. அரை தூக்கத்திலிந்து எழுந்த என்னை அம்மா தலையசைத்து அழைத்தாள். நான் பாயிலிருந்து மண்டியிட்டுத் தவழ்ந்து சென்று அம்மா மடியில் முகம் புதைத்துக்கொண்டேன்.

அரசூர் தாத்தா மெல்ல தொண்டையைச் செருமியபடி ஆரம்பித்தார். ”ஒனக்குப் பித்துக் கொண்டுடுச்சி தம்பி. நா பாத்து வச்ச புள்ளதான் அது, அதுமேல அபாண்டம் சொன்னா நாக்கு அழுவிப் பூடும். பூமி நோவாத புள்ள அது. யோசிச்சுப் பேசு.”
அப்பா கண்களில் கோபத்தோடு தரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். குடவாசல் அத்தை முனகலாக, “தம்பி மட்டும் வேணுன்னா சொல்லுது. கட்டுன புருசனே பொண்டாட்டிய தூத்துவானா? அவ ஒத்த முந்தானையும் ஓரமா பூ வக்கியும்போதே நெனச்சேன்.”
கும்பகோணம் மாமா அத்தையை முறைத்தார். ”மதனி! நீங்களும் ஒத்த பொண்ணப் பெத்து வச்சிருக்கீங்க. பாத்துப் பேசுங்க. எங்க வீட்டுப் புள்ளய அப்பிடி வளக்கல.”
அத்தை கழுத்தை வெட்டி முகத்தைத் திருப்பிக் கொண்டாள். சித்தப்பா கோவத்தில் மூக்கு விடைக்க, உதடு துடிக்க… பாதி அழுகையுடன், “இன்னும் கோவில்ல இருக்க சாமிதான்யா மிச்சம். அதையுங்கொண்டாந்து கூண்டுல ஏத்திருங்கய்யா. பெத்த தாயி மாதிரி வயித்த தடவி சோறு போட்டு வளத்தாங்க எங்க மதனி. இதெல்லாம் கேட்டுக்கிட்டு உசுரோட இருக்கம்பாரு…சே! மனுஷங்களா இவுங்க?”
அப்பா சீறினார். ”செருப்பால அடிப்பேன்! வாய் மூடுறா.”
ஒருவர் வார்த்தை மீது மற்றவர் வார்த்தை விழுந்து வாதம் தடித்தது.
அரசூர் தாத்தா அதட்ட நிசப்தம் நிலவியது. 
தாத்தா அம்மாவைப் பார்த்தார். “கேக்க நாக்கு கூசுதும்மா செளந்தர்யம். நீ என்னம்மா சொல்ற?” 
அம்மா மூக்கை உறிந்து முந்தானையால் துடைத்துவிட்டு மெளனமாய் அமர்ந்திருந்தாள். சேட்டி பெரியம்மா அடித்தொண்டையில், “அண்ணங்கிட்டப் போனவ யாருகிட்ட சொல்வான்ற கதையாயில்ல இருக்கு. அவகிட்ட கேட்டா? நாலு புத்திமதி சொல்லி இனிமேயாவது ஒழுங்கா குடும்பம் நடத்த சொல்லறத உட்டுட்டு… எங்க ஊருன்னா கரும்புள்ளி செம்புள்ளி குத்தியிருப்பாங்க. குடும்பத்து பொம்பளக்கி அழகா இது?”
கும்பகோணம் மாமா தோள்துண்டை ஓங்கித் தரையிலடித்துவிட்டு விடுவிடு என்று வெளியே போய்விட்டார். 
அவரவர் எதை எதையோ பேசினார்கள். எனக்கு அடிவயிற்றில் ஏதோ பிசைந்தது. பெரியம்மா, அத்தை எல்லாம் என்னை சூழ்ந்துகொண்டு ”பயப்படாதய்யா! வாடா செல்லம்” என்று எனக்கு ஆறுதல் போல பேசினர். எனக்கு அவர்கள் யாரையுமே பிடிக்கவில்லை. சித்தி முந்தானையை மட்டும் இறுகப் பற்றிகொண்டேன். 
சேட்டி பெரியம்மா அருகில் வந்து, ”ஒரத்தன் வந்து போறானாமே ஒம்மாளப் பாக்க, நீ பார்த்துருக்கியா?”
”க்ர்ர்ர்ர்கா…தூ” அவள் முகத்தில் முழிந்தேன். அப்பா துள்ளி எழுந்து கையை வீசினார். எனக்குக் கன்னம் தீப்பற்றி எறிய அலறினேன். அம்மா பதறி என்னை இழுத்து மார்போடு அணைத்துக்கொண்டாள்.
அரசூர் தாத்தா அலறினார். ”ஏ சேட்டி! பொம்பளயா நீ? பத்து வயசுப் புள்ளகிட்ட என்ன பேசனும்னு தெரியாது? ஒன் வக்கிர புத்திக்கி அந்தக் குழந்ததான் கெடச்சிதா? ஒனக்கறிவெங்க போச்சு கிருஷ்ணமூர்த்தி? புள்ளய இப்புடியா போட்டு அடிப்ப? பதினோரு வருசமா தவங்கெடந்து பெத்தப் புள்ள. சே…”
அத்தைகளும் பெரியம்மாவும் இத்தனை நாள் அம்மாமேல் இருந்த ஆற்றாமையைக் கொட்டிக் கவிழ்த்தனர். பத்து, பன்னிரண்டு வருடத்துக் கதையெல்லாம் வந்தது. அம்மா மட்டும் அப்படியே இருந்தாள். அரசூர் தாத்தா நடுநிலையாக இருக்க, கும்பகோணத்து மாமாவும், சித்தப்பாவும்தான் அம்மாவுக்காகப் பேசியது. மற்றவர்கள், “என்னய்யா இத்தன வயசில போயி இப்படி பேசிக்கிட்டு” என்று மெளனமாக இருந்தனர். பூசல் கொஞ்சங்கொஞ்சமாக அடங்க, பெண்கள் குளிக்கவும் அடுக்களைப் பக்கமும் போய்விட்டனர். ஆண்கள் மட்டும் அப்பாவை சுற்றியமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பா, சிலையாக அமர்ந்திருந்தார். அம்மா சலனமில்லாமல் மெளனமாக அமர்ந்திருந்தாள். நான் மூன்றாம் வகுப்பு படிக்கையில் பென்சில் திருடிவிட்டதாக என் மேல் குற்றம் சாட்டிய சங்கரனை கீழே தள்ளி மார் மேல் ஏறிக் குத்தியதை அமுதா டீச்சர், அம்மாவிடம் சொன்னபோது அம்மா எனக்குச் சொன்னது இதுதான்.           “நீ எடுக்கல இல்ல, அப்புறம் ஏன் ஆர்ப்பாட்டம் பண்ற? தப்பு செஞ்சவங்கதான் தப்ப மறைக்க ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க.” நான் விசும்பியபடி, ”அப்புறம் எல்லாம் நான்தான் எடுத்தேனு நெனைப்பாங்க” என்றதற்கு சிரித்துவிட்டு, ”மேல சாமி இருக்கு, அது எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுருக்கும். அதுக்குத் தெரிஞ்சா போதும்.”
அரசூர் தாத்தா வெற்றிலையில் சுண்ணாம்பு தடவியபடி செய்தித்தாளை மேய்ந்துகொண்டிருந்தார். தூரத்தில் கும்பகோணத்து மாமா தென்னை மரத்தில் கை ஊன்றி வானத்தை வெறித்துக்கொண்டிருந்தார். கண்கள் கலங்கியிருப்பதை இங்கிருந்தே கண்டுகொள்ள முடிந்தது. அவரைப் பார்த்து எப்போதும் தோன்றும் பயம் மாறி அவரைப் பிடித்துப் போனது.அம்மா மட்டும் அதே இடத்தில் அமர்ந்திருந்தாள். மடியில் படுத்திருந்த என் தலையைக் கோதியபடி தரையிலிருந்த ஒரு கரும்புள்ளியையே வெறித்துக் கொண்டிருந்தாள். அம்மாவும் அப்பாவும் அதே இடத்தில் அமர்ந்திருக்க, கூட்டம் மெல்ல கரைந்தது. அதன்பின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பேச்சுவார்த்தை அறவே நின்றது.
”டேய்! சாப்பாடு என்னாச்சு?” என்பார். அம்மா எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டுப் போய்விடுவாள். அம்மா கையில் அப்பா காசு தந்து நான் பார்த்ததில்லை. முன்னால் அப்பா வர, பின்னால் பொன்வண்டு சோப்பு பனியன் போட்ட கணேசன் அட்டைப் பெட்டியை தூக்கியபடி வருவான். மளிகை அப்படித்தான் வரும். பால், காய்கறி எல்லாமே எல்லாம் திண்ணையிலேயே பைசலாகிவிடும். அம்மா பாதி நேரம் அடுக்களையில் இருப்பாள், இல்லையேல் சடசடவென ஓடும் தையல் மிஷினில். லெதர் உறைபோட்ட மர்ஃபி ரேடியோ ‘கண்ணனொரு கைக்குழந்தை’ என்று பாட அம்மா லயித்து உதட்டசைத்தபடி அதற்கு சடசடவென தையல் மிஷினில் பின்னணி சேர்த்தபடி இருப்பதெல்லாம் அப்பா இல்லாதபோது மட்டும்தான். மற்றபடி அடுக்களைதான் அவளுக்கு கதவில்லாப் பூட்டில்லாச் சிறை. கல்யாணம் காட்சி எதுவானாலும் அப்பா மட்டும்தான் போய்வருவார்.
அன்று மர்ஃபி ரேடியோ ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ என்று பாட, அம்மா கண்மூடி லயிப்பது போலிருந்தாலும், அவள் எங்கோ தொலைவில் தொலைந்திருந்தாள். 
“அப்பாவுக்கும் உனக்கும் என்னம்மா பிரச்னை?” அவள் தொலைத்திருந்த தூரத்திலிருந்து மீண்டு வந்தாள். “ஒரு பிரச்னையும் இல்லப்ப.”         “நெறய பேர் வந்து பேசுனாங்களேம்மா?” அம்மா என் தலையைக் கோதிவிட்டாள். “பயமா இருக்கா?” நான் இல்லை என்று தலையாட்டினேன். “நீங்க பயப்படுறீங்களாமா?” 
அவள் விரக்தியாக சிரித்தாள்.
“பயப்படுற வயச நா தாண்டி வந்துட்டேன்.” அவள் பார்வை மீண்டும் எங்கோ தொலைவுக்குச் சென்றது. தொடர்ந்தாள், ”எனக்கு 16 வயசு கல்யாணமாவும்போது, பக்கத்து வீட்டுப் பையனைக் காதல் பண்றேனு சந்தேகப்பட்டு, எனக்கு அவசர அவசரமா கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. அப்ப உன் அப்பாவ பாத்தா பயமா இருக்கும், எடுத்ததுக்கெல்லாம் கோவப்படுவாங்க, அப்புறம் எல்லாம் பழகிப்போச்சு. புருஷன் பொண்டாட்டினா சண்ட வரத்தான் செய்யும்.
“அப்பா ரொம்ப மோசமானவங்க இல்லம்மா?” என்றேன். அம்மா என்னையே பார்த்தாள். ’இல்லப்பா! ரொம்ப நல்லவங்க” சிறிது நேரம் மெளனமாக இருந்தாள். பின், ”அம்மா மேல அவங்களுக்கு அளவு கடந்த பிரியம்ப்பா. அதுதான் இப்பிடியெல்லாம். இதுவரைக்கு கை ஓங்கினதில்ல. இப்பதான்… மீண்டும் மெளனத்துக்கு போய்விட்டாள். கொஞ்சம் வளர்ந்ததும் அம்மா சொன்னது உண்மைதான் என்று எனக்குத் தோன்றும்.
ஒருமுறை குடவாசல் லட்சுமி அத்தை, ”அவன் அவன் லட்சுமி மாதிரி பொண்டாட்டி வீட்ல இருக்கும்போதே வெளியில் தொடுப்பு வச்சிக்கிறான். ஒனக்கென்ன கேடு கவர்மெண்டு உத்தியோகம், சொத்து பத்துனு ஏகம் கெடக்கு. நம்ம வாத்தியார் பொண்ணு மரகதங்கூட இன்னும் கரசேராம கெடக்குறா… உம்ன்னு ஒருவார்த்தை சொன்ன தங்கத் தட்டுல வச்சில்ல நீட்டுவாங்க… என்ன வயசா போயிடுச்சி? கண்ட கண்ட நாடு மாறி கைல கஞ்சி வாங்கி குடிக்க நீ என்ன குத்தம் செஞ்ச?” என்றதற்கு அதைக் கவனிக்காததைப் போல, ”ஏன்க்கா, அத்தான் உரத்துக்குக் காசு வேணும்னு கேட்டுக்கிட்டிருந்தாங்களே, ஏற்பாடாயிடுச்சா?” என்றார் சம்பந்தமில்லாமல். அப்பா தன்னை வலுக்கட்டாயப்படுத்தி வயசானவனாக ஆக்கிக் கொண்டிருந்தார். அவர் வயதுக்கும் பத்து மூத்தவர் போல தோன்றினார். முன்பெல்லாம் யாராவது நான்கு பேர் எங்கள் திண்ணையில் தி ஹிந்துவிலிருந்து சார்லஸ் டிகன்ஸின் ஆலிவர் ட்விஸ்ட்வரை பாலசந்தரின் அபூர்வராகம் முதல் தி.ஜா வின் சக்தி வைத்தியம் வரை அப்பாவுடன் அளந்து கொண்டிருப்பார்கள். இந்த ஏழு வருடங்களாக அது உறங்கிக்கொண்டிருக்கிறது. அவ்வப்போது தெருநாய் ஒன்று சுருண்டு படுத்திருக்கும். அப்பா பார்த்தால் விரட்டி விடுவார். அப்பா யார் பேச்சையோ கேட்டு அம்மாவைத் தூற்றியதின் விளைவை அவரும் சேர்ந்தே அனுபவித்துகொண்டிருந்தார். அவருக்கு பரிந்து பேசுவது போலவும் வக்காளத்து வாங்குவது போலவும், அவரைக் காயப்படுத்தியவர்கள்தான் ஏராளம். அவரின் சகோதரிகள் உட்பட, அவர் அடிபட்ட நத்தியாக ஓட்டுக்குள் பதுங்கித்தான் வாழ்ந்தார். ஊர் வாய்க்கு அம்மா ருசியாக இருந்தாள்.
”பாவம் வடலூராரு! குடி கூத்தின்னு ஒரு பழக்கமில்லாத மனுஷன், அவருக்கு போயி இப்பிடி ஒரு பொண்டாட்டி கிடைச்சிருக்க வேணாம். வீட்டுலேயே கூத்தடிச்சாளாம்ல! பாக்கப் பூனை மாதிரி இருக்கா, என்ன வேலை செஞ்சிருக்கா பாரு. எனக்கெல்லாம் நெனைச்சாலே ஒடம்பு கூசுது. சே! எப்படித்தான் இவளுங்களால முடியுதோ?” தான் பத்தினி என்பதில் தனக்கோ தன்னைச் சார்ந்தவர்க்கோ சந்தேகம் வராமலிருக்க வேண்டிய யாரோ ஒருத்திக்கு அம்மா அளவுகோலானாள். ஒரு கோட்டின் பக்கத்தில் சிறிய கோடு வரைந்தால் மற்றது பெரியதுதானே.
“சும்மாயிருக்கா! நம்ம என்னத்த கண்டோம். என்ன இருந்தாலும் அந்தம்மாவும் பொட்டப் பொறப்புதான?” நான் பிறரைப் புறம் பேசாதவள் என்று போர்டு போட்டுக்கொண்டு ஊர்கதை பேசும் மற்றவள்.
“சும்மா கெட ! அவ நாத்தானாரே சொல்றா… கல்யாணத்துக்கு முன்னாடியே பெருசா காதல்லாம் பண்ணாளாமே, கிழிஞ்ச துணிய தச்சா நின்னுடுமா? ஒண்ணுமே நடக்காமதான் கட்டுன புருசனே பஞ்சாயத்து கூட்டுனாரா?” பஞ்சாயத்துக்கு இவர்கள் யாருமே அழைக்கப்படவில்லை என்பது போக அந்தப் பஞ்சாயத்து நடந்து பல வருடமாகியிருந்தது. நெடுநேரம் வாய் மூடியிருந்தால் வாய் நாறிவிடுமென்று, அம்மாவுக்கு நடத்தைகெட்டவள் அரிதாரத்தைப் பூசி நாறடித்தார்கள். நடத்தைகெட்டவளின் கணவனாக தன்னைத்தானே வரித்துக்கொண்டதால் அப்பாவும், எந்தக் காரணமும் இல்லாமல் மகனாக நானும் கூசினோம். இத்தனை வருடங்களில் நடந்த எத்தனையோ தீபாவளி, பொங்கல், அறுவடை, வீட்டு வெள்ளை காற்றில் கலைந்து போயிருக்க அம்மாவுக்கு நடந்த பஞ்சாயத்து அப்படியே நிறம் மாறாமலிருந்தது.
அம்மாவுக்கு மட்டும் எந்தச் சலனமுமில்லை. இது எதுவும் அவள் காதுக்கு எட்டுவதேயில்லை. அவளுக்கு மர்ஃபி ரேடியோ பாடலும் அடுக்களையும் தையல் மிஷினும் போதுமானதாக இருந்தது. இந்த உலகம் பற்றி கவலைப் படாமல், அவள் உலகை அழகாக வைத்திருந்தாள்.
பன்னிரண்டாவதில் நல்ல மதிப்பெண் எடுத்துவிட்டு ஓடிவந்து அம்மாவிடம் காட்டியதும், என் கன்னங்களைப் பிடித்துக்கொண்டு என் நெற்றியில் அவள் நெற்றியை முட்டி வெகுநேரம் அமர்ந்திருந்தாள். பின், “நீ நல்ல மார்க் மட்டும் எடுக்காம இருந்திருந்தா நடத்தகெட்டவ, புள்ளய எப்பிடி வளத்திருக்கா பாருன்னு ஊரு சொல்லியிருக்கும் இல்ல?” என்றாள். நான் அவள் கையைப் பிடித்து என் கன்னத்தில் வைத்துக்கொண்டு அவள் முந்தானையில் முகம் புதைத்தேன். என் அம்மாவின் வாசம் என் நாசி வழி நுழைந்து என் நெஞ்சுக்கூடெங்கும் நிறைந்தது. ”மேல சாமி இருக்கு. எல்லாம் அது பார்த்துக்கிட்டிருக்கும். அதுக்குத் தெரிஞ்சா போதும்” என்றேன். அம்மா கலகலவென சிரித்து என் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள். எவ்வளவு அழகான சிரிப்பு என் அம்மாவுடையது. அம்மா தன்னுள் புதைத்துக்கொண்ட பல விசயங்களில் இதுவும் ஒன்று. அவள் பலவரிசை தெரியாமல் செய்யும் புன்னகையை மட்டும் தான் நான் பார்த்திருக்கிறேன். அந்தச் சமயம் என் அம்மாவின் சிரிப்பை இழந்ததற்காக நான் யார் மேலேயோ கோவப்பட்டேன். 
அண்ணாமலையில் இஞ்ஜினீயரிங் படித்துக்கொண்டிருந்த சமயம். கும்பகோணத்து மாமா அரக்கப்பரக்க வந்து நின்றார். 
“என்ன மாமா?”
”அப்பாவுக்கு அட்டாக்னு சொல்றாங்க…” அவர் குரல கமறலாய் வந்தது.
நாங்கள் வீடு சேரும்போது வீடே கூட்டமும் கதறலுமாக இருந்தது. அப்பா மாலையும் கழுத்துமாக நடுவீட்டில் மூக்கில் பஞ்சடைத்து வாயில் வெற்றிலை திணித்துப் படுத்திருந்தார். என்னைப் பார்த்ததும் ஓலங்கள் இன்னும் பெரியதாக வெடித்தன. குடவாசல் அத்தை தொண்டை நரம்பு புடைக்க வீரிட்டாள். ”ஐய்யோ! நா பெத்த ராசா, நீ தவங்கெடந்து பெத்த புள்ள வந்திருக்கய்யா. கண்ண தொறந்து பாரேன்யா. எந்த கூச்சிக்காரியோ குத்துக்கல்லாட்டம் ஒக்காந்துருக்கா. நீ போயிட்டியேய்யா. யாந்தம்பி மானஸ்தனாச்சே. மருங்கியே உசிர உட்டுடுச்சே. ஐய்யோ! அம்மா அப்பாவின் தலைமாட்டில் முந்தானையை வாயிலடைத்து பிரமை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள். அப்பாவின் முகத்தைப் பார்த்தேன். என்னையறியாமல் என் கண்களில் நீர் கட்டியது. என் அப்பாவின் ஒரு சந்தேகம் என் அம்மாவை அவர் சாவில்கூட  துகிலுரிந்துகொண்டிருந்தது.
“எப்படி மாமா?”
“ஆஃபிஸ்ல இருக்கும்போது அட்டாக்காம். வாயுன்னு அசட்டையா இருந்து மோசம் பண்ணிட்டாரு.”
”துக்கத்த அடக்கி வக்கியாதயா ஒரு பாட்டம் அழுதுருய்யா” சேட்டி என்னைக் கட்டிக்கொண்டு அழுதாள். நான் அம்மா அருகில் சுருண்டுகொண்டேன்.
பதினாறாம் நாள் விடியற்காலை அம்மா குளித்துமுடித்து கைநிறைய கண்ணாடி வளையல்களும் மஞ்சள் குங்குமமும் தலை நிறைய பூவுமாக வந்தமர்ந்தாள். இத்தனை வருடத்தில் அம்மா சிங்காரித்துக்கொண்டு நான் பார்த்ததில்லை. நாலைந்து மூத்த கைம்பெண்கள் வீட்டில் நுழைந்து விசயம் புரிந்து அம்மா என்றலறினேன்.
“புள்ளைய வெளில கூட்டிட்டுபோங்கப்பா” மூத்த கிழவி சொல்ல என்னை ஆண்கள் சிலர் வெளியே இழுத்து வந்தனர். உள்ளே ஒப்பாரி தொடங்கியது. தென்னை மரத்தருகே கும்பகோணத்து மாமா முதுகு காட்டி நின்றிருந்தார். என்னைப் பார்த்ததும் முகம் கோணி உடல் குலுங்கியது. மெல்ல குரல் ஓலமாக மாறி, “ஒத்த புள்ள யாங்கூட பொறந்தது. அழகா பொறந்திருக்கு, அழகா பொறந்திருக்குன்னு தூக்கிக் கொஞ்சுனமே. அழகா பொறந்தது அது தப்பா” எங்களைச் சுற்றிக் கூட்டம் கூடியது. குடவாசல் அத்தை, சேட்டி என் எல்லோர் தலையும் தெரிந்தது. கும்பகோணத்து மாமி அவர் காலைக் கட்டிக்கொண்டு அழுதாள். மாமா தொடர்ந்து மாறிலடித்துக்கொண்டு கதறினார். ”அது அழகே அதுக்கு வெனையாயிடிச்சே. இப்ப அதையும் அலங்கோலப்படுத்தறாங்களே. காலம்பூரா பொணங்கொத்திக் கழுகா கொத்திக் கொத்தியே என் புள்ளயே செதச்சிட்டாளுங்களே. அன்னக்கே சொன்னவங்க தலைய வாங்கிட்டுப் போயிருப்பேன். பொறுண்ணே பொறுண்ணேன்னு என் புள்ள மறுங்கி கெடந்துதே. ஐயய்யோ மூளியா பாக்கவா நா வந்தேன்” தூண் போன்ற மனிதன் துவண்டு சரிந்ததைப் பார்த்து நான் திகைத்து நின்றேன்.
காரியம் முடிந்தது காக்காய் கூட்டம் பறந்து வீடு வெறிச்சோடிக் கிடந்தது.
அம்மா எப்போதும் அதிகாலையில் குளித்துவிட்டு தலையில் ஈரத்துண்டைச் சுற்றியபடி கொல்லையில் நின்று தூர தெரியும் வேதபுரீஸ்வரர் கோபுரத்தைப் பார்த்து கைகூப்பி அசையாமல் நிற்பாள். அப்போது முகம் முழுக்க சந்தோஷமாகத் தெரிவாள். இன்றும் அப்படித்தான் நின்றாள். முகம் மட்டும் சாந்தமாய் இருந்தது.
“ஏம்மா! ஈஸ்வரன அவ்ளோ புடிக்கும்னா, ஒரு எட்டு கோயிலுக்குப் போயிட்டு வரலாமே?” அம்மா விழி மலர அழகாகப் புன்னகைத்தாள். எனக்காக மட்டும் அம்மா தன் புன்னகையைச் சேர்த்து வைத்திருந்தாள். 
“இங்க வா…” என்றாள் புன்னகையூடே. நான் அவளருகில் சென்றேன். என்னைப் பக்கத்தில் நிறுத்திக்கொண்டு கைநீட்டி கோபுரத்தைக் காட்டினாள். எங்கள் வீட்டுத் தென்னங்கீற்றின் ஊடாக வேதபுரீஸ்வரர் கோபுரம் தெரிந்தது. பச்சை, நீலம், சிவப்பென்று வண்ணம் வண்ணமாகக் குழைத்து உடலெங்கும் தொங்கும் சிற்பங்களில் பூசிக்கொண்டு, பின்னால் வானம் இருண்டிருக்க காலைக் கதிரவனை தன் மேல் சுமந்து பளீரென மின்னியது. அம்மா என் மோவாயைப் பிடித்துத் திருப்பி, ” இந்த அழகு கிட்ட போய் நின்னா தெரியாது. காக்கா எச்சமும் பொக்கையுந்தான் தெரியும்” நான் அவள் கையைப் பிடித்தேன். ”கிட்ட நின்னு பாத்தா மட்டும் சுத்தமாவும் அழகாவும் இருக்குறது எது தெரியுமாம்மா?”
எனக்கு உதடு துடித்தது. விம்மலாய் வந்து படீரெனப் பெருங்குரலுடன்  வெடித்தது என் அழுகை. ”நீங்கம்மா… நீங்கம்மா” அவள் முன் மண்டியிட்டு அவள் வயிற்றில் முகம் புதைத்துக் கதறினேன். “நீங்கம்மா… எத்தனையோ வருஷத்து அழுகை பீரிட்டு வந்தது.


  


Saturday 23 December 2017

ஒரு மறுக்க முடியாத முட்டாள்தனத்தின் மொத்த புத்தகம்

மனிதனின் வெற்றி அவன் உலகிடமிருந்து கற்றுக்கொள்ளும் பாடத்தில் இருக்கிறது. உலகென்றால் பூச்சி புழு மண் கல் என அனைத்தையும் சேர்த்து தான்
Predator fails
வேட்டை மிருகங்கள் எப்போதுமே தங்களின் முயற்சிகளில் வெற்றி காண்பதில்லை. அதே போல் நம்மைப்போல் availability of food source அவைகளுக்கு அத்தனை எளிதாக வாய்ப்பதில்லை. நம்மை போல் அவை breakfast, lunch,  dinner என்று சுகபோகமாக வாழ்வதில்லை. ஒவ்வொரு உணவும் போராட்டம் தான். நம்மைவிட மோசமான உலகில் அவை வாழ்கின்றன.
ஒரு சிறுத்தை.
மூன்று பாலுண்ணும் குட்டிகளின் தாய். நான்கு நாட்களாக தொடர்ந்து தன் வேட்டையில் தோற்கிறது. ஒவ்வொரு வேட்டையிலும் தன் வலுவை இழக்கிறது. பால் வேறு ஊட்டியாக வேண்டும். அது அதை இன்னும் பலமிழக்க செய்கிறது. இன்னும் இரண்டு நாள் தாண்டினால், மரணம் தான்.
இதுவரை அது தன் வேகத்தை நம்பி தான் வேட்டையை பிடிக்கிறது. இப்போது ஒவ்வொரு வேட்டையிலும் அதன் வேகம் குறைகிறது. இப்போது மிருகத்திற்கே உரிதான குணத்திற்கு வருகிறது.
Change of strategy.
தற்போது தன்னிடம் மிச்சமுள்ள சக்தியை கொண்டு தான் வேட்டையாடவேண்டும்.
தான் வேட்டையாட போகும் மிருகம் பலம் குன்றியதாக தேர்ந்தெடுக்கிறது.
அது எதிர்த்து போராட கூடியதாக இல்லாமல் பார்த்துக்கொள்கிறது.
மூன்றாவது attack on surprise. அதாவது ambush attack முறையை தேர்ந்தெடுக்கிறது.
தன் speed எனும் egoவை மூட்டைக்கட்டி வைக்கிறது. இரையை பதுங்கி நெருங்குகிறது.
தன் take off pointயை இன்னும் நீளமாக்கிறது.
இரை 60% 70% 85% என ரகரகமாக வாய்ப்புகள் அளித்தும் 100% sure shotக்கு காத்திருக்கிறது.
இரையின் 270° visionக்கு உள் வந்ததும் வழக்கமாக எடுக்கும் "break into run" strategyயை மாற்றி, blind spotக்குள்ளேயே இரையை 10 அடி தொலைவு வரை நெருங்குகிறது.
One last plunge.
Success.
Change your strategy measuring your diminishing strength and never stick to your single strategy.
Fittest will survive, not the strongest.
#A_book_of_undeniable_nonsense

Saturday 14 November 2015

ஜீலம் நதி போர் பாகம் ௨


இவ்வாறு புஷோத்தமன் என்னும் புருவின் படைபலத்தையும் பார்ப்போம்.

புருவிடம் 20,000 காலாற்படை, 3000 குதிரை படை, 300 தேர்ந்த போர் யானைகள் மற்றும் 300 போர் ரதங்கள் இருந்தது. அதை தாண்டி குருதியால் தோய்ந்த  நீண்ட போர் சரித்திரம் இருந்தது.

முன்னம் சொன்னது போலவே புருவின் படைகலன்கள் அலெக்சாண்டரின் படைகலன்களை விட உலோக ரீதியாக சிறந்திருந்தது. 


புருவிய படைகளிடம் இருந்த கோடாரிகள் ஈட்டிகள் யாவும் உருக்கிரும்பினால் ஆனவை. இவை மெது இரும்பும் கரிஇரும்பும் சேர்த்து மடித்து பல அடுக்குகளாக அடிக்கப்பட்டவை. இதன் காரணமாகவே இவை எளிதில் உடையாமலும் எளிதில் மழுங்காமலும் இருந்தன. இவற்றின் கடினத்தின் முன் வெண்கல கவசங்களும் கேடையங்களும் தடையாக இருக்க வாய்ப்பில்லை. 

மேலும் வளைந்த வாட்களை புருவிய வீரர்கள் கொண்டிருந்தனர், இவ்வாட்களும் பல அடுக்கு மடித்து அடித்த கரி இரும்பினால் ஆனவை. இவற்றின் கடினமும் கூர்மையும் எளிதில் வீழ்த்த கூடியதில்லை. இவற்றை ஒற்றை கையால் போர்க்களத்தில் சுழற்றுவது அத்தனை எளிதானது.

மேலும் இவர்களின் கவசம் அலெக்சாண்டரின் படையினரது போல் உலோகங்களால் ஆனவை இல்லை. இவை தோலினால் ஆனவை. ஆனால் பிரத்தியேக தன்மை கொண்டவை. இக்கவசம் தோலினால் மேல் பாகம் செய்யப்பட்டு உள்ளே கம்பளி மற்றும் பத்தப்படுத்தாத பஞ்சின் பல அடுக்குகளால் ஆனவை . இன்றைய தோட்டா துளைக்காத கவசங்கள் இப்படிதான் உருவாக்கப்படுகின்றது. இக்கவசங்களை ஈட்டியும் வாளும் கடந்துவிட இயலாது. இது போன்ற கவசம் வீரர்களை பொதி சுமக்க வைக்காமலும் அவர்களின் அசைவுகளை தடுக்காமலும் மிக இலகுவாக அவர்களை போர்க்களத்தில் இயங்க அனுமதிக்கும்.


புருவின் போர் குதிரை படையும் இவ்வாயுதங்களை தாங்கி இருப்பதுடன் கணிசமான வேகத்தையுடைய குதிரைகளையே வைத்திருந்தனர். இக்குதிரைகள் அரபிய குதிரைகள் போல் உயரமாகவும் பெரிதாகவும் இல்லாமல் நடுத்தர ரகமாகவே இருந்திருக்கிறது. இக்குதிரைகளும் கம்பளி பஞ்சு அடைப்புகள் கொண்ட கவசங்களை அணிவிக்கபட்டிருந்தன. ஆகையால் வேகமும் உயரமும் குறைந்திருந்தாலும் இவருக்கான பாதுகாப்பு மேசிடோனிய குதிரைகளைவிட சற்று கூடுதலே.


புருவின் விற்படையை பார்த்தே ஆகவேண்டும். அது மிக முக்கியமாக எதிரிகளை அச்சுறுத்தம் தன்மை கொண்டது.

புருவின் விற்படை வீரர்கள் தாங்கி நிற்கும் விற்கள் சுமார் அறடி உயரம் கொண்டது, மேலும் அதன் அம்புகள் சுமார் 4 - 5 அடி நீளமுள்ளவைகள். விற்களை தரையில் பதித்து இடது காலால் அசையாமல் பிடித்துக்கொண்டு அதை இயக்குவார்கள். அம்புகளின் முனைகள் கரி இரும்பினால் ஆனதாலும் ஆறடி உயரம் மற்றும் வலிமை வாய்ந்த  விற்களில் இருந்து புறப்படும் இவ்வம்புகளை அலெக்சாண்டரிடம் இருந்த எந்த கவசமும் தடுத்து நிறுத்தவியலாது. 

மூன்றாவதாக வருவது புருவின் தேர்ப்படை.


நான்கு சக்கரங்கள் கொண்ட இரு குதிரைகள் இழுக்கும் இத்தேர்கள் இலகு ரகத்தை சேர்ந்தவை. இதை இழுக்கும் குதிரைகளும் கவசம் பூண்டு இருக்கும். இதை செலுத்தும் சாரதியும் ஆயுதம் தாங்கி முழு கவசத்துடன் போர் ஏதுவாக இருப்பான்.  இந்த தேர்கள் பின்னிலிருந்து ஏற கூடியவை. முன் பக்கம் முழுதும் கவசமாக்கப்பட்டவை. இத்தேர்களில் இரு அல்லது மூன்று போர்வீரகள் ஈட்டி மற்றும் வாட்கள் தாங்கி இருப்பார்கள். இத்தேர்கள் அசுர வேகத்தில் எதிரின் காலாட் பிரிவில் புகுந்து துவம்சம் செய்ய கூடியவை. ஆனால் இக்காலகட்டத்தில் காலாட்படை இத்தேர்களுக்கு வழிவிட்டு பின்னாலிருந்து தாக்கும் கலையை பயின்றிருந்தனர். 


நான்காவதாக வரும் யானை படை தான் இந்தியாவை நெருங்க இதர உலகத்தை அச்சுறுத்திய படை. 11 முதல் 12 அடி உயரமுள்ள யானைகள், முற்றிலும் போரில் பழக்கப்பட்ட நகரும் கோட்டைககளே. இவற்றின் கட்டளைக்கு பணியும் மூர்க்கத்தனமும் அசாத்திய பலமும் வேறு எந்த மிருகத்திற்கும் இல்லாத துதிக்கையும் இவற்றை மிக பெரும் போர் ஆயுதங்களாக்கின. புருவின் இந்த யானைகள் போருக்காக பயிற்சி பெற்றவை அல்ல, அவை போரிலேயே பயிற்சி பெற்றவை. போர் நுணுக்கங்களும் கட்டளைக்கு பணிந்து அச்சமில்லாமல் எதிரி படையினுள் புக கூடியவைகளும் ஆகும். மேலும் இந்த யானைகள் உடல் முழுதும் எதிர்களின் ஈட்டிகளை சமாளிக்கக்கூடிய இரும்புதகடில் ஆன கவசம் சூடியவை. இவற்றின் மேல் அமைந்த பரண்கள் இரண்டு அடுக்காக இருக்கும், முதல் அடுக்கு உடலின் இரு பகுதிகளும் தொங்கும் பலகணிகள். இவற்றில் ஒவ்வொரு புறமும் இரு வீர்கள் இருப்பார்கள். இவர்கள் ஈட்டி மற்றும் விற்கள் தாங்கி இருப்பார்கள். மேலே உள்ள பரணில் தலைவீரன் இருப்பான். இவன் பெரும்பாலும் பெரிய ஈட்டியை தாங்கி இருப்பான். இவர்கள் அனைவரும் உடற் கவசம் தரித்து வாட்களை உடன் வைத்திருப்பார்கள். இந்த யானைப்படை அனாயசமாக காலாட்படையையும் குதிரை படையையும் துவம்சம் செய்ய கூடியவை. 


இப்போது கரையேறியுள்ள அலெக்சாண்டரை பார்ப்போம். சுமார் 20000 காலாட்படைகள் 8000 கனரக குதிரை படைகள் மற்றும் 1000 இலகுரக குதிரை விற்படையுடன்  அலெக்சாண்டர் முதலில் கரையேறினான் என்கிறார்கள் ஒரு சாரார். மிச்சமுள்ள படைகள் நதியின் தீவிலேயே கடக்க ஆயுத்தாமாகி இருந்திருந்தார்கள் அல்லது அலேக்சாண்டரால் இந்த கடவைக்கு முன்னரே,  தலைமை முகாமுக்கும் கடவை இடத்திற்கும் இடையில் அக்கரையில் பிரித்து நிறுத்தி வைக்கப்பட்டவர்கள். இவர்கள் சுமார் 10,000 காலாட்படை 2000 முதல் மூவாயிரம் கனரக குதிரை படை. 

இதற்கு அலெக்சாண்டருக்கு தேவைப்பட்ட நேரம் சுமார் 5 மணிநேரங்கள். இப்போது விடியலின் வாசலில் அலெக்சாண்டர் கரையேறி இருந்தான். 

இதுவரை எல்லாமே அலெக்சாண்டரே செய்துக்கொண்டிருக்க புரு ஒன்றுமே செய்யாமல் அமைதியாக இருந்திருப்பதுப்போல் உங்களுக்கு தோன்றலாம், ஆனால் அது இல்லை உண்மை. வரலாற்று ஆசிரியர்கள் அலெக்சாண்டரின் பக்கமே துதிபாடினாலும் அவர்கள் அலெக்சாண்டர் கரை ஏறியதும் அவனை புருவின் மகன், இரண்டாம் புரு நேரடியாக தன் படையுடன் சந்தித்ததை ஒப்புக்கொள்கிறார்கள். இது எப்படி சாத்தியம்?
முன்னர் சொன்னது போல் புரு தன் முழுப்படையையும் ஒன்று சேர்த்து கொண்டது உண்மையாக இருந்தாலும் அது முற்றிலும் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. புரு போன்று போரிலேயே ஊறிய மன்னன் ஒரு போதும் அவ்வாறான தவறுகளை இழைக்க வாய்ப்பில்லை. புரு தன் முக்கிய காவற்படைகளை திரும்ப அழைத்து கொண்டாலும் சிறு படைகளையோ அல்லது ஒற்றர்களையோ அங்கிருந்து அப்புறப்படுதியிருக்க மாட்டான். இந்த ஒற்றர்கள் தான் புருவிற்கு அலெக்சாண்டர் 27 கிமீ தூரத்தில் நதியை கடப்பதை சேதி சொல்லி இருக்க வேண்டும்.

அலெக்சாண்டர் விடியலில் கரையேறுவதற்கு முன் இரண்டாம் புருவின் தலைமையில் புரு ஒரு சிறு படையை அனுப்பி வைத்திருந்தான். புருவிற்கு தெரிந்ததெல்லாம் ஒரு சிறு முன்படை நதியை கடந்து வருகிறது என்பது தான். புரு ஒரு போதும் அலெக்சாண்டரே தன் முக்கால்வாசி படையுடன் அங்கே கரையேறுவது தெரிந்திருக்கவில்லை என்றே சொல்லலாம். காரணம், அவ்வாறு தெரிந்திருந்தால் வெறும் 1000 குதிரைகளும் 100 தேர்களையும் மட்டுமே தந்து தன் வீர மகனை அனுப்ப வேண்டிய அவசியமில்லை, அனுப்பி இருக்க வாய்ப்பே இல்லை. நிச்சயமா புரு, இரண்டாம் புருவின் தலைமையில் ஒரு படையை பின்னே விட்டுவிட்டு தானே தான் முன் வந்திருப்பான்.

Tuesday 13 October 2015

http://news.nationalgeographic.com/news/2005/11/1114_051114_india_2.html

https://en.wikipedia.org/wiki/Peopling_of_India#Humans_and_the_Toba_catastrophe

http://phys.org/news/2013-06-refutes-early-humans-india-prior.html

http://www.nature.com/news/human-migrations-eastern-odyssey-1.10560

http://metis-history.info/euro2.shtml

http://websfor.org/alexander/arrian/book5a.asp

http://deadliestwarrior.wikia.com/wiki/Alexander_the_Great
https://en.wikipedia.org/wiki/Companion_cavalry

ஜீலம் நதி போர்


கிமு 333ல்  ரத்தம் சிதறிய பெர்ஷிய படையெடுப்பை வெற்றியுடன் முடித்து கொண்டு, கழுகளுக்கும் நரிகளுக்கும் ஏராளமான மனித உடல்களை விட்டு அலெக்சாண்டர் தன் படையை கிழக்கு நோக்கி திருப்பியது, பொன் விளையும் பூமியான இந்தியாவின் வடமேற்கு கதவை தட்ட தான்.


இந்தியாவின் வடமேற்கு எல்லை வரை விரிந்திருந்தது முதலாம் டேரியஸின் சாம்ராஜ்யம்.


ஒக்சியார்டஸை தோற்கடித்து இன்றைய ஆப்கானிஸ்தானுக்கும் தஜிகிஸ்தானுக்கும் இடையே உள்ள சொக்டியோனா கோட்டையை கைப்பற்றிய அலெக்சாண்டர், இன்றைய பெஷாவாரை சேர்ந்த அன்றைய காந்தாரத்தின் குறுநில மன்னர்கள் அல்லது பாளையக்காரர்களை அழைத்து அவனது அதிகாரத்திற்கு கீழ்பணிய ஆணையிட்டான். அதை இந்து நதிக்கும் ஜீலம் நதிக்கும் இடையில் உள்ள நிலங்களை, இன்றைய ராவல்பிண்டியிலிருந்து (அன்றைய டக்சிலா) ஆட்சி செய்த அம்பியும் ஏற்றுக்கொண்டான் என்கிறார்கள் சில வரலாற்று ஆசிரியர்கள். எனினும் இதில் மாற்று கருத்துகள் உண்டு.

போரஸ் எனும் புருவுடன் தக்ஷஷீலாவின் அம்பிக்கு மிக பெரும் பகை நிலவி உள்ளது. தன பக்கத்தை பலப்படுத்த அம்பி சொக்டியோனாவிலிருந்த அலெக்சாண்டருக்கு தூது விட்டதாக தான் க்விண்டஸ் பதிந்துள்ளார்.

அலெக்சாண்டரின் துணைக்கண்ட போரெடுப்புகளுக்கு தலைமையகமாக டக்சிலா எனும் தக்ஷசீலம்  இயங்கியது.

இண்டசை கடந்து வந்த அலெக்சாண்டருக்கு காத்து கொண்டிருந்தது அம்பிகா என்னும் அம்பியின் படை. கடலென குவிந்திருந்த படையை கண்டு அலெக்சாண்டர் பிரமித்ததாக கூறுகிறார் அலெக்சாண்டரின் சரித்திரத்தை எழுதிய க்விண்டஸ் கர்ஷியஸ் ரபுஸ்.


க்விண்டஸின் கூற்றுப்படி அலெக்ஸாண்டர் தன் படைகளை ஒழுங்கு செய்ய துவங்க தக்ஷசீலத்தின் அம்பி பெரும் பரிசுகளுடன் அலெக்ஸாண்டரை சந்தித்ததாகவும், அலெக்ஸாண்டர் அப்பரிசுகளை திரும்ப தந்தது மட்டுமில்லாமல் அம்பிக்கு பெர்ஷிய பட்டாடைகளும் 30 குதிரைகளும் 25000 கிலோ தங்கத்தையும் கொடுத்ததாக கூறியுள்ளார்.

இதிலேயே பல சந்தேகங்கள் எழும்.
1. அம்பியின் அழைப்பை ஏற்று அலெக்ஸாண்டர் வந்திருந்தால் அலெக்ஸாண்டர் அம்பியின் படையை கண்டு ஏன் தன் படையை ஒழுங்கு படுத்த வேண்டும்.?
2.முதலில் அம்பி ஏன் தன் முழு படையுடன் வர வேண்டும்.?
3. அலெக்சாண்டரிடம் அம்பி சரணடைந்தால் அம்பிக்கு அலெக்சாண்டர் ஏன் கப்பம் கட்ட வேண்டும்? இதில் கவனிக்க வேண்டியது அலெக்ஸாண்டர் தன்  படையெடுப்புகளில் மிக கொடூரமாகவே நடந்து கொண்டிருக்கிறான். இதற்கு பெர்சிபோலிஸ் மற்றும் தேப்ஸில் நடந்த போருக்கு பின்னான கொள்ளைகளும் கொடூரங்களும் சான்று.
இந்நிகழ்ச்சியை பற்றி இன்னொரு கூற்று உள்ளது. அது அலெக்சாண்டர் அம்பியிடம் நட்பு கரம் நீட்டி பரிசளித்து அம்பியின் பரம எதிரியான புருஷோத்தமன் புருவின் மேல் போர் தொடுக்க உதவி நாடியுள்ளான். அதன் பிறகே அம்பி தன்  நிலத்தில் அலெக்சாண்டர் படைவீடு அமைக்க உதவியுள்ளான். மேலும் 5000 குதிரைபடையை தன்  இளவரசன் தலைமையில் பௌரவ அரசின் மேல் போர் தொடுத்த அலெக்சாண்டரின் படையுடன் இணைத்துள்ளான். மேலும் இப்பாயஷன் மற்றும் பெர்டிகஸ் என்னும் அலெக்சாண்டரின் இரு தளபதிகள் சிந்து நதியின் குறுக்கே படகுகளால் பாலம் அமைக்க அம்பி உதவியதாக வரலாற்று ஆசிரியர் அர்ரியன் தன் "ஆனபாசிஸ் அலெக்சாண்டரி"யில் குறிப்பிட்டுள்ளார்.

தன் படைகளை நேர் செய்துகொண்டு அலெக்ஸாண்டர் புருவிற்கு பணிந்து விடும் படி செய்தி அனுப்பினான். புருவிடம் வந்த பதில் நம் எல்லோருமே எதிர் பார்த்ததுதான்.

"களத்தில் சந்திப்போம், பணிதல் பழக்கமே இல்லை" என்பது தான்.
இந்தியாவை கண்ணில் கண்டுவிட்ட அலெக்ஸாண்டர் கனவுகளை கொன்று போட விரும்பவில்லை. 

கொய்நஸிடம் அலெக்ஸாண்டர் சிந்து நதியில் தாங்கள் கட்டிய படகுகளை பிரித்து வண்டிகளில் கொண்டுவருமாறு ஆணையிட்டான். கொய்நஸும் சிறிய படகுகளை இரு பாகங்களாகவும் 20 துடுப்பிடகூடிய பெரிய படகுகளை மூன்று பாகமாகவும் கொண்டுவந்து ஜீலம் கரையில் சேர்த்தான்.


அலெக்ஸாண்டர் தன் படையில் உடல்நலம் குன்றியவர்களை தக்ஷஷீலத்திலேயே விட்டுவிட்டு சோர்ந்த படைவீரர்களை வீடு திரும்ப அனுப்பிவிட்டு. தேர்ந்த போர்வீரர்களை மட்டும் சேர்த்துக்கொண்டு கிளம்பினான்.  

அலெக்சாண்டரின் படை ஆரவாரத்துடன் 100 மைல் தாண்டி இருந்த ஜீலம் நதியை நோக்கி புறப்பட்டது.

கிமு 326, கிரேக்க மாதம் க்விண்டிளிஸ் எனும் இன்றைய ஜூலை மாதத்தில்  சுமார் 40,000 காலாட்படை, சுமார் 10000 வரையான குதிரை படையுடன் (இதில் தக்ஷசீல 5000 குதிரைகள் அடக்கமில்லை) பெர்ஷியாவின் குதிரை வில்லாளிகள் (எண்ணிக்கை அறியவில்லை குறைந்தது 1000 இருக்கும்) மற்றும் அடிமைகள், வேசிகள், அரவாணியர்கள், இசை கலைஞர்கள், கட்டிட கலைஞர்கள் இத்தியாதிகள் என்று குறைந்தது 1,60,000 ஆட்களுடன் மேசிடோனியாவின் அலெக்சாண்டர் ஜீலம் நதியின் வடக்கு கரையில் வந்து படைவீடு அமைக்கிறான்.


அலெக்சாண்டரின் வருகை அறிந்த ஜீலம் நதியின் தெற்கே பௌரவ வம்ச அரசன் புருஷோத்தமன் புரு 20,000 காலாற்படை,3000 குதிரை படை, 300 தேர்ந்த போர் யானைகள் மற்றும் 300 போர் ரதங்களுடன் காத்திருக்கிறான்.
புருவை பற்றி கொஞ்சம் பார்த்துவிட்டு வருவோம்.
ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ள புரு வம்சாவளி தான் பௌரவ மன்னன் புருஷோத்தமன் புரு என்கிறார் இந்திய வரலாற்றாசிரியர் தாமோதர் தர்மானந்த கோசாம்பி. புரு பாரத வம்சத்தின் கிளை. புருஷோத்தமன் குறைந்தது ஏழடி உயரமும் அதற்கேற்ற திடகாத்திரமும் உடையவன்.இவன் பெரும் யானையின் மேல் அமர்ந்திருப்பது சாதாரண மனிதர்கள் குதிரையின் மேல் அமர்ந்திருப்பது போல இருக்கும் என்கிறார் அர்ரியன். இவன் ஜீலம் நதியின் கிழக்கு மற்றும் தெற்கு கரை பகுதி துவங்கி அதன் பின் உள்ள நிலங்களை செனாப் நதிக்கரை வரை ஆட்சி செய்து வந்த மன்னன். மேலும் இவன் சத்திரிய தர்மமான "தர்மயுத்த" போர் முறையை கடைபிடிப்பவன்.
அலெக்ஸாண்டரின் படைக்கும் புருவின் படைக்கும் இடையே ஒரு மைல் அகலத்திற்கும் ஆழத்திற்கும் பெரும் பாய்ச்சலுடன் ஓடிக்கொண்டிருந்தது ஜீலம் நதி. இன்னும் சில வாரங்களில் பருவமழை துவக்கம் உள்ளது என புரு அறிவான். அப்பருவ மழை ஜீலத்தின் ஆழத்தையும் அகலத்தையும் வேகத்தையும் இன்னும் பன்மடங்கு கூட்டும் என அறிந்தே இருந்தான் புரு. அலெக்ஸாண்டர் நதியை கடந்து வந்தால் கரையிலேயே அலெக்ஸாண்டருக்கு தக்க வரவேற்பு கொடுத்து அனுப்ப ஏதுவாக நின்றான் புரு. புருவை பற்றி ஏற்கனவே நன்கு விசாரித்து வைத்திருந்த அலெக்சாண்டர் எதிர் கரையில் வந்து நின்ற எதிரியை நோட்டம் விட்ட பின், இந்நதியை கடந்து சென்று புருவை சந்திப்பது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம் என்பதை நன்கே உணர்ந்திருந்தான்.
அர்ரியன் பார்வையில் அலெக்ஸாண்டரே கண்டு வியந்த படையை உடைய அம்பியே அசைக்க இயலாத புருவிடம் அலெக்ஸாண்டரை விட குறைந்த படையே உள்ளது எனும் போதே புருவின் வீரம் புரிந்திருக்கும் அலெக்ஸாண்டருக்கு. எப்போதும் போல அலெக்சாண்டரின் குள்ளநரித்தனம் வேலை செய்ய துவங்கியது. அலெக்சாண்டர் போன்ற இராணுவ நிபுணர்கள் உலகில் குறைவு. கௌகமேலா யுத்தத்தில், மூன்றாம் டேரியஸின் 2,50,000 படையை 47,000 எண்ணிக்கையை கொண்ட படையை கொண்டு நொறுக்கி தள்ளிய அவனுடைய 160 கோண திருப்பம் மிக பிரசித்தி பெற்றது. எதிரி படைகளை பிரித்து ஆளும் மதிநுட்ப கலை அவனிடம் அபரீதம்.அலெக்ஸாண்டரை மாவீரன் என்று உலகு கொண்டாடியதற்கு காரணம் அவனின் தொடர் வெற்றிகள் மட்டுமில்லை அது அவனின் மதிநுட்ப போர்த்திறனும் கூடத்தான். ஒரு காய்ச்சிய இரும்பை அடிக்கும் ரீதியில் தான் அவன் எதிரியை குலைப்பான். முன்னிலிருந்து தாக்குதலை துவங்கும் அவன் சுற்றிவளைத்து எதிரியை பின்னிலிருந்தும் அடிக்க எதிரி குலைந்து போவான். இதே முறையில் தான் மூன்றாம் டேரியஸை கௌகமேளாவில் வீழ்த்தினான் அலெக்ஸாண்டர்.
பெரும் யானைகளை முன்னணியில் கொண்டிருந்த புருவை அத்தனை எளிதில் நதிமுகமாக போய் வென்றுவிட இயலாது என அலெக்சாண்டார் திண்ணமாக நம்பினான். யானைகளின் பிளிரல்களிலேயே குதிரைகள் சிதைந்து ஓடிவிடும். மேலும் இத்தனை பெரும் படையை மரக்கலம் மூலம் நதியை கடந்து போவதென்பது ஆகாத காரியமென நன்கே அறிந்திருந்தான். யானையை கண்டதுமே குதிரைகள் நதிக்குள் தாவிவிடும். மேலும் தன் இருமுனை தாக்குதல் தந்திரம் நேரடி போரில் எடுபடாது. நதிக்கரையை நெருங்கும் போதே வீரமிகு புரு தன் மொத்தபடையை ஜலசமாதி ஆக்கிவிடுவான் என அஞ்சினான்.
அதற்காக அலெக்ஸாண்டர் செய்த சூழ்ச்சி வேறு. அவன் மூலையில் வேறு ஒரு திட்டம் உதித்தது.
அலெக்ஸாண்டரிடம் ஒன்பது தளபதிகள் இருந்தனர்.
கரேடரஸ்
கொய்நஸ்
இப்பாயஷன்
ப்டோலெமி
பெர்டிகஸ்
செல்யூகஸ்
லைசிமேகொஸ்
டேமொநிகஸ் மற்றும்
ப்யூசெஸ்டாஸ்.
இவர்களுக்கு அலெக்சாண்டர் கொடுத்த ஆணை, "வெறுமனே தயார் படுத்தி கொண்டிருங்கள் படையை. எதிரிக்கு நாம் நதியை கடக்க ஏதுவாகிறோம் என புரியவேண்டும்" இவ்வாணையை செவ்வனே செய்தார்கள் படை தளபதிகள்.
நதியின் மேலுக்கும் கீழுக்குமாக மேசடோநியர்கள் படையை நகர்த்தி கொண்டிருந்தார்கள்.
புருவும் நதியை அலெக்ஸாண்டர் கடக்க கூடும் எனும் இடங்களுக்கு சிறு சிறு படைகளை அனுப்பி வைத்திருந்தான்.

ஆனால் அலெக்ஸாண்டரின் எண்ணம் வேறாக இருந்தது. பனிக்காலம் வரை காத்திருக்க முடிவு செய்தான். காரணம் சிந்து நதி பனிக்காலங்களில் வடக்கே உறைந்து போவதால் நதியில் நீர் வரத்து குறையும் அப்போது நதி மிக சுருங்கி காணப்படும். இந்த தருணத்தில் நதியை கடந்து புருவை எதிர்க்கொள்ள போகிறேன் என்று அலெக்சாண்டர் தன் தளபதிகளிடம் கூறினாலும், அவன் மனதில் வேறு எண்ணங்கள் இருந்தது. பனிக்காலம் வரை காத்திருக்க அலெக்ஸாண்டரின் துருதுருப்பு இடம் தரவில்லை.


அலெக்ஸாண்டரின் கூடாரங்களில் கேளிக்கையும் கூத்துமாக இருந்தது. இரவுகள் முழுதும் ஆட்டம் பாட்டமென ரகளையாக அமர்களப்பட்டது.


இரவில் பல நேரங்களில் அலெக்ஸாண்டரின் படைகள் பெரும் ஒலிகளை எழுப்பிக்கொண்டு நதியை கடப்பது போல அங்கும் நகரும் . கிரேக்க போர் கடவுள் இன்யாளியஸின் போர்கூவல்களை கூவுவார்கள். இப்பேரொலிகளுக்கு இடையே அலெக்ஸாண்டர் அவ்வொலிகளின் எதிர் திசையில் தன படையை நகர்த்த பழக்கபடுத்தி இருந்தான். 


இரண்டு மாதங்களாகியும் எந்த கடக்கும் முயற்சியும் நடை பெறாதது புருவிற்கு அலெக்ஸாண்டரை பற்றிய ஒரு அசட்டையை ஏற்பட செய்தது. புரு தன் கவனத்தை கொஞ்சம் தளர்த்தி கொண்டான். அங்குமிங்குமாக தான் அனுப்பிய கண்காணிப்பு படைகளை திருப்பி அழைத்து கொண்டான் புரு. இதை தான் அலெக்ஸாண்டரும் எதிர் பார்த்தான்.  


இதற்கிடையில் அலெக்சாண்டர் தன் ஒற்றர்கள் மூலம் நதி எங்கே மெலிந்துள்ளது என கண்டறிய அனுப்பினான். இரவுகளில் ஜீலத்தின் கரையை அளந்த ஒற்றர்கள் அலெக்சாண்டருக்கு ஒரு இடத்தை காட்டினர். அலெக்சாண்டர் அவ்விடத்தில் குறும்பாக சிரித்திருக்க வேண்டும், காரணம் கடலை போல ஆர்ப்பரிக்கும் ஜீலம் நதி ஓரிடத்தில் அலெக்சாண்டரை அக்கறைக்கு வரவேற்க ஏதுவாக  மெலிந்திருந்தது. மேலும் மக்கள் நடமாட்டமில்லாத இடமான அது காடுகளால் சூழப்பட்டிருந்தது. அது அலெக்ஸாண்டரின் சூழ்ச்சிக்கு சிறந்த மறைப்பை தரும். அவ்விடம் புரு படைவீடு அமைத்து காத்துக்கொண்டிருந்த இடத்திற்கு வடகிழக்கே நதிஒட்டதின் எதிர் திசையில் கிரேக்கத்தில் 150 ஸ்டேடுகள் தொலைவிலிருந்தது (ஒரு ஸ்டேட் 180 மீட்டர்கள்) சுமாராக 27 கிலோமீட்டர்கள். அலெக்ஸாண்டர் எதிர்பார்த்தது இப்படி ஒரு கடவையை தான். ஆனால் ஜீலம் நதி அலெக்ஸாண்டரை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது. அது அலெக்ஸாண்டருக்கு சில அதிர்ச்சிகளை வைத்திருந்தது.


அலெக்சாண்டர் க்றேடரசின் தலைமையில் ஒரு படையை தான் முகாமிட்டிருந்த அதே இடத்தில் நிறுத்தினான். அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை இரவு முழுதும் நதியை கடக்க முயற்சிப்பதும் பெரும் ஒலிகளை எழுப்புவதும் ஆகும். அது புருவிற்கு முழுபடையும் அங்கேயே இருப்பதுபோன்ற தோற்றத்தை அளிக்கும். மேலும் அலெக்சாண்டருடன் வந்த இதர போர் வீரர்கள் இல்லாத குழுக்கள் பெரிய படை அங்கிருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும். பெரிய அளவிலான முகாம் தீக்கள் அதை மேலும் வலியுறுத்தும். க்றேடரசுக்கு அலெக்சாண்டர் தன் திட்டத்தை தெளிவாக விளக்கி இருந்தான். 


அது, ஒரு போதும் புருவின் சந்தேகங்களை தூண்ட கூடாது அலெக்சாண்டர் தன் வலுவாய்ந்த படையுடன் நதியை தாண்டும் வரை. ஆனால் நதியை கடந்ததும் எப்படியும் புரு அறிந்து கொள்வான். எனினும் புருவிற்கு அலெக்சாண்டர் ஒரு முன் பிரிவு படையை அனுப்பியது போலதான் தோன்றவேண்டும். அப்போது புரு ஒரு சிறிய படையை தான் தன்முன் பிரிவு படையை சந்திக்க அனுப்புவான்புருவின் சிறுபடை அலெக்ஸாண்டரின் முழு படையை சந்திக்கும் போது, முதல் யுத்தத்திலேயே புருவின் கணிசமான படை நொறுக்கப்படும். இது புருவின் பலத்தை குறைக்கும். மேலும் நேரடி போர் துவங்கியதும், புரு ஆற்றின் அப்புறம் உள்ள படையை சந்திக்க தன் படையை பிரித்து கரையில் நிறுத்துவான். அது மேலும் அவன் படை பலத்தை பிரிக்கும். முழு வீச்சில் போர் துவங்கியதும் க்றேடரஸ் தன் படையுடன் ஆற்றை கடந்து வந்து இணைய வேண்டும். இப்போது புருவின் அச்சுறுத்தும் யானைகள் கரையில் இருக்காது. இது தான் திட்டம்.


அலெக்ஸாண்டர் படை: 

கொய்நஸ், இப்பாயஷன், டெமிட்ரியஸ் தலைமையில் பாக்டரியா, ஸ்கித்தியா மற்றும் சொக்டியோனாவின் குதிரை படை
டானின் குதிரை விற்படை, 
கிளிட்டஸ் மற்றும் கொயினஸின் தலைமையில் மேசிடோநியாவின் பிரசித்தி பெற்ற ஈட்டி படை (இதை பற்றி பின்னால் பேசுவோம்) மற்றும் 
அக்ரியானியர்களின் விற்படை.

இப்படையுடன் ஒரு மழை இரவில் இருட்டை பயன்படுத்தி கொண்டு அலெக்ஸாண்டர் ஜீலம் நதியின் அந்த மெலிந்த பகுதியை நோக்கி நகர்ந்தான்.


அந்த இரவில் ஒரே நாளில் அலெக்ஸாண்டர் சுமார் 30,000 முதல் 35,000 போர்வீரர்கள் மற்றும் 8000 குதிரைகள் படையையும் பெரும் படகுகள் ஏற்றபட்ட பாரவண்டிகளையும் நகர்த்தி கொண்டு புருவின் கண்ணில் படாமல் நகர்ந்திருக்க வாய்ப்பில்லை. முதலில் அத்தனை பெரும் படை நகர்ந்தாலே பெரும் ஓசைகள் எழும்பும். மேலும் குதிரைப்படை போகும் வேகத்திற்கு காலாட்படை ஈடு கொடுக்க இயலாது என்பதால் குதிரைகள் தான் காலாட்களுக்கு ஈடு கொடுக்க வேண்டும். அப்படியானால் ஒரு போர்வீரனின் க்விக் மார்ச் எனும் வேகநடை மணிக்கு 5.4 கிமீ தான். இதே கதியில் 27 கிலோமீட்டரை கடக்க 5 மணிநேரம் ஆகும் அங்கே சென்று படகுகளை கட்டி முடித்து ஆற்றைக்கடக்க இரண்டு முழுநாட்கள் ஆகும். ஆக, அலெக்சாண்டர் ஒவ்வொருவர் தலைமையிலும் படையை கொஞ்சம் கொஞ்சமாக அனுப்பி இருக்க வேண்டும். படகுகளும் ஏற்கனவே அங்கே கட்டபட்டிருக்க வேண்டும். அலெக்ஸாண்டர் கடக்க திட்டமிட்டிருந்த அந்த நதி வளைவில் காடு மண்டி இருந்ததாக குறிப்பிருக்கிறது. ஆகையால் படகுகளும் ஓரளவு படையும் அங்கே தேர்கனவே காட்டின் மறைவில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். இவ்வளவும் புருவின் ஒற்றர் கண்களில் மண்ணை தூவிவிட்டு செய்தாக வேண்டும். 


க்விண்டிளிஸ் எனும் ஜூலை மாதம் பகல் நீண்டதாக தான் இருக்கும். ஆக அலெக்சாண்டர் சுமார் இரவு 7 மணிக்கு மேல் தான் கிளம்பி இருக்க வேண்டும். கடக்க முடிவு செய்த இடத்தை அலெக்சாண்டர் இரவு 12 மணிக்கு முன் அடைந்திருக்க வாய்ப்புகள் குறைவு. கடும் மழையின் ஒலியின் மறைவில் அலெக்சாண்டர் தன் படையை நகர்த்திக்கொண்டு நதியை கடக்கும் இடத்திற்கு போய் சேர்ந்திருப்பான்.  

அலெக்சாண்டரிடம் அதிகம் நேரம் இருக்க வாய்ப்பில்லை. விடியலுக்கு முன் கரையை கடந்தால் மட்டுமே புருவிற்கு அலெக்சாண்டர் வைத்திருந்த அதிர்ச்சி வைத்தியம் எடுபடும்.

முப்பது துடுப்புகள் இடும் படுகுகளில் சில பகுதி படைகள் ஏறின. அலெக்சாண்டருடன் ப்டோலமி, லைசிமாக்பஸ், பெர்டிகஸ், செல்யூகஸ், அலெக்சாண்டரின் ஹிடோய்ராய் என்னும் தற்காப்பு குதிரைப்படை மற்றும் கேடைய வீரர்கள் தனி படகில் பயணித்தனர். ஆட்டின் தோலில் வைக்கோல் அடைத்து அதை ஒரு மிதவையாக்கி அதை பிடித்து நீந்தியபடி பெரும்பாலான காலாற்படைகளும் ஜீலம் நதியின் அந்த மெலிந்த வளைவை கடந்தனர். நதியை கடந்து கரையேறி படையை சீர் செய்து நடந்தவர்களுக்கு ஜீலம்  வைத்திருந்த அதிர்ச்சி, அவர்கள் நதியை முழுதும் கடக்கவில்லை அது வெறும் நதியின் குறுக்கே உள்ள ஒரு தீவு என்பது. கிட்டத்தட்ட முக்கால் கிலோமீட்டர் அகல தீவது. இந்த அதிர்ச்சியை எதிர்பார்க்காத அலெக்சாண்டர் அதை கண்டு மலைக்கவில்லை. துரிதமாக அடுத்த வேளையில் இறங்கினான். அது இந்த தீவிலிருந்து அடுத்த கரைக்கு போக ஆழமில்லாத பகுதி எதுவென கண்டறியப்பட்ட ஆணைதான் அது. வெகு விரைவில் குதிரைகளின் கழுத்தாழமுள்ள இடத்தை அலெக்சாண்டர் கண்டுக்கொள்ளும் போது விடியலுக்கு இன்னும் சற்று நேரம் தான் பாக்கி இருக்க வாய்ப்பிருந்தது. குதிரைப்படை குதிரை மேலேயே அமர்ந்து கரையை கடக்க, அந்த படையை பின்பற்றியே ஆட்டுத்தோல் தக்கைகளில் மற்றவர்கள் கரையை கடந்தனர்.  இங்கே அலெக்சாண்டர் தம் கொண்டுவந்த முன்படையில் முழுப்படையையும் கடத்தி செல்லவில்லை. இவற்றின் நடுவே நாம் கவனிக்க வேண்டியது ஜீலம் நதி கொட்டும் மழையில் வெள்ள பெருக்கெடுத்து ஓடிகொண்டிருந்தது என்பது. 





இந்த வகையில் அலெக்சாண்டரின் படைகலன்களை கொஞ்சம் பார்த்து விட்டு வருவோம். அலெக்சாண்டர் களத்தில் புருவை சந்திக்க வந்த போது அவனிடம் இருவகையான படைகள் தான் இருந்தது ஒன்று குதிரை படை மற்றொன்று காலாட்படை. மாசிடோனியாவின் குதிரை படை கேடையங்கள் கொண்டிருக்காது. இவர்கள் "கோபிஸ்" எனும் வகை மூன்றடி நீள குருவாட்களை நெருக்கமான போருக்கும் "ஸைஸ்ட்டன்" எனும் 13 அடி நீள ஈட்டியை நடுத்தொலைவு போருக்கும் உபயோகிப்பர். இவர்கள் "கூய்ராஸ்" எனும் வெண்கல உடற்கவசமும் பையோஷியன் வெண்கல தலைக்கவசமும் அணிந்திருப்பார்கள். இவர்கள் தான் முதல் தாக்குதலை துவங்குபவர்கள்.


இதில்லாமல் பெர்ஷியாவின் படையெடுப்பில் அலெக்சாண்டருக்கு அதிகம் தொந்தரவு கொடுத்தது குதிரை வில்லாளிகள் தான். இவர்கள் ஈரானிய பழங்குடியினர். இவர்கள் ஸ்கித்தியன் வில் எனும் இலகுரக ஆனால் கடினமான விற்களை தாங்கி குதிரையிலிருந்து புயல் போல் எதிரியின் முன்னணியை தாக்குவார்கள். வெகு வேகமாக நகரும் இவர்களின் குறியை யாரும் அனுமானிக்க இயலாதது இவர்களின் பெரிய பலம். இவற்றின் தாக்கும் தொலைவு 500 மீட்டர்கள் வரை.


ஒரு குதிரை வில்லாளி சுமார் 120 அம்புகளை தாங்கி போர்க்களத்தில் புகுவான். 1000 வில்லாளிகள் 1,20,000 அம்புகளுடன் போர்க்களத்தில் எதிரியின் படையை வட்டமிட்டபடி  500 மீட்டர் தொலைவிலிருந்தே தாக்கும் போது எதிரியின் கட்டுகோப்பு குலைந்து சிதறிவிடும். அலெக்சாண்டரிடம் இக்குதிரை வில்லாளிகள் சுமார் 1000 பேர் இருந்தனர் அவன் ஜீலம் நதியின் தெற்கு கரை ஏறும்போது. 


அடுத்து மேசிடோநியாவின் கனரக காலாட்படை அல்லது சிறப்பு ஈட்டிப்படை.

மேசிடோநியாவின் ஒவ்வொரு படைவீரனும் சரிஸ்ஸா எனும் 18 அடிகள் கொண்ட இருமுனை ஈட்டி, இந்த ஈட்டி உடைந்தாலும் கையிலுள்ள பாதி ஈட்டியும் ஆயுதமாக பயன்படும் வகையில் இரு முனையிலும் ஈட்டி இலைகள் இருக்கும். மேலும் இருமுனையின் தலையாய பங்கு சரியான சமநிலை நிறுவில் இருக்கும், ஆதலால் இலகுவாக போரில் பயன்படும். இவர்களின் கேடயங்கள் 64 முதல் 72 சென்டிமீட்டர் கொண்ட வட்டமான குவிந்த கேடையங்கள். இவை வெளியில் வெண்கலத்தாலும் உள்ளே மரக்கட்டை மற்றும் தோலாலும் ஆனவை. மேலும் இவர்கள் கோபிஸ் எனும் மூன்றடி வாளையும் நெருக்கபோர்காக வைத்திருப்பார்கள். 

இவர்கள் 16 பேர் கொண்ட பத்திகள் மற்றும் 16 வரிகளில், மொத்தம் 256 வீரர்களால்  ஆனா படைபிரிவுகளை கொண்டவர்கள். இது ஒரு உடைக்கவியலா அசாத்திய கோட்டை. முதலில் உள்ள பதினாறு பெரும் தங்கள் 18 அடி ஈட்டியை நீட்டி பிடித்திருக்க அடுத்த வரியுள்ளவர்களும் முதல் 16 பேருக்கு இடையே உள்ள இடத்தில் தங்கள் ஈட்டியை நீட்டி பிடித்திருப்பார்கள். வரும் எதிரி குறைந்தது 12 அடிகள் முன்னேயே கூர் ஈட்டிகளை சந்திக்க வேண்டும் மேலும் அவர்கள் அவ்வீட்டிகளை சமாளித்து முன்னேறினாலும் அடுத்து மூன்றாம் அடியில் அடுத்து வரிசை ஈட்டிகள் காத்திருக்கும். இப்படி ஒவ்வொரு வரி விழுந்தாலும் தொடர்ந்து 16 வரிகள் எதிரியை அசரவைக்கும். இந்த அமைப்பை சின்டேக்மா அல்லது ஸ்பீரா என்பார்கள் கிரேக்கர்கள்.







இடைசொருகலாக ஒரு செய்தி: புருவிடம் அலெக்சாண்டர் பொன்னையும் வெள்ளியையும் தாண்டி இரும்பை தான் பரிசாக எதிர்பார்த்தான் என்று அர்ரியனின் ஒரு குறிப்பு இருக்கிறது. உண்மையில் இந்தியாவின் யானைகளையும் இரும்பு ஆயுதங்களையும் கண்டுதான் பேர்பாதி உலகம் அன்று பயந்து கொண்டிருந்தது. வாட்கள் தயாரிப்பில் சிறந்த இரும்பான இன்றைய டமாஸ்கஸ் ஸ்டீலின் முன்னோடியாக அறியப்படுவது வூட்ஸ் எனும் தமிழர்களின் உருக்கு இரும்பு தான். இந்தியாவில் மடித்து அடிக்கப்பட்ட உருக்கு இரும்பாலான ஆயுதங்களின் கூர்மைக்கு முன் பிற எதிரிகளின் வார்ப்பு இரும்புகள் ஒன்றுமே இல்லை.  மொத்தத்தில் இக்காலக்கட்டத்தில் உலோக வளத்தில் செழித்திருந்த இந்தியர்களுக்கு இணையாக ஆயுதகலையில் உலகத்தில் எவருமே இல்லை.
.


      

Saturday 10 October 2015

வெட்சி

அமெரிக்க டாலர் அம்பத்தி அஞ்சு ரூவாய்க்கு மேல உள்ள இந்த காலக்கட்டத்துல இந்திய ஒரு செல்வ செழிப்பான நாடுன்னு சொன்னா இன்னைய தேதிக்கு இது ஒரு மிக பெரிய ஜோக்கா தான் தெரியும். இன்னைக்கு உள்ள சந்ததிக்கு இன்னைல இருந்து 10,000 வருஷத்துக்கு முன்னாடி எல்லாம் இந்த நாடு எப்படி இருந்தது, எவ்வளவு செல்வத்தோட இருந்ததுன்னு புரியவைக்கிறது கொஞ்சம் கஷ்ட்டம் தான். ஏன்னா இங்கிருந்து கிட்டத்தட்ட எல்லாமே சுரண்டி எடுத்துகிட்டு போய்ட்டாங்க. ஒரத்தர் ரெண்டு பேரு இல்ல, முகம்மது கஸினவில  துவங்கி இன்னைக்கு ஸ்விஸ்ல இருக்கும் கருப்பு பணம் வரை.
இந்தியாவ எப்புடியாவது புடிசிடனும் அப்படின்றது தான் நெறைய பேரோட கனவே  இருந்தது அதுக்கு காரணம் இங்க கொட்டி கிடந்த செல்வம்.
இந்தியான்னு சொன்னதும் இன்னைக்கி உள்ள மேப்பை கைல வச்சிக்கிட்டு பாக்காதீங்க. இந்தியான்னு இந்த மண்ணுக்கு பேரு வந்ததுக்கு காரணமே சிந்து நதி தான். ஆனா, இப்போ அது பாகிஸ்தான்ல ஓடுது. பாகிஸ்தான் இன்னைய இந்தியா கொஞ்சம் அப்கானிஸ்தான் எல்லாம் சேந்தது தாங்க இந்தியான்னு சொன்னாங்க. சொல்லப்போனா பாகிஸ்தானும் நம்ம வடமேற்கு இந்தியாவும் சேர்ந்தது தான் இந்தியா.

இன்னைய இந்தியா எப்படி தோன்றுசின்னு பாத்துட்டு வந்தோம்ன்னா, ஏன் எவ்வளவு பேர் அருவாள தூக்கிகிட்டு இந்த மண்ணுக்குள்ள பூந்தாங்கன்னு பாத்துடலாம்.

சுமாரா 30ல இருந்து 18 கோடி வருசங்களுக்கு முன்னாடி இப்போ இருக்க மாதிரி 7 கண்டங்களா உலகம் கிடையாது. மொதல்ல ஒரே கண்டமா இருந்ததுங்க. அது பேரு பேன்ஜியா (Pangea). இது 30 கோடி வருஷத்துக்கு முன்னாடி துண்டு துண்டா இருந்த நிலங்கள் சேர்ந்து அதுக்கப்பறம் 17.5 கோடி ஆண்டுகளுக்கு முன்னாடி உடைய ஆரம்பிக்குதுங்க. பேஞ்சியாவா இருக்கும் போது இதை சுத்தி இருந்த ஒரே பெருங்கடலுக்கு பேரு பேந்தலஸ்ஸா (Panthalaassa). பேன்ஜியா அப்படின்னா கிரேக்கத்துல "ஒரே மண்" அப்படின்னு அர்த்தம். பேந்தலஸ்ஸான்னா ஒரே கடல்ன்னு அர்த்தம்.பின்னாடி ஜுராசிக் காலத்தில் பூமி தட்டுகள் நகர்ந்ததால இது 7 கண்டமா பிரிஞ்சது. ஜுராசிக்ன்னா  டைனோசர்ங்க நெனைப்புக்கு வந்தாலும் ஜுராசிச்ன்ற பேரு மேற்கு ஆல்ப்ஸ் மலை தொடர்ல இருக்குற ஜுரா மலைகளால வைக்கபட்ட பேர். ஜூரான்னா காடுகள் அப்படின்றது துணை சேதி.
இன்னைய இந்தியா அப்படின்றது ரெண்டு பெரும் நிலபரப்பு ஒன்னு சேர்ந்தது.சுமாரா ஏழரை கோடி ஆண்டுகள் முன்னாடி சூப்பர் கண்டத்துல இருந்து இன்னறைய தெற்கிந்திய தீபகற்பம் "கழட்டிக்கடா நேக்கா"ன்னு கழட்டிக்கிட்டு வந்து யுரேஷியன் ப்ளேட்ல வந்து மோதுச்சி. 
யுரேஷியன் ப்ளேட் அப்படின்றது, இந்தியாவோட மண்டைக்கு மேல கடலால பிரிக்கபடாத இரு கண்டங்களான யுரோப்பும் ஆசியாவும் சேர்ந்த நிலபரப்பு. யுரேஷியன் ப்ளேட்ல வந்து தெற்கிந்திய தீபகற்பம் மோதுனுதால  நகராத யுரேஷியன் தட்டுல கொஞ்சம் சுருக்கம் விழுந்தது தான்  இமாலய மலை தொடரும் காரக்கோரம் மலைத்தொடரும். ஹிமாலயான்னா சமஸ்கிரத்ததுல "பனியின் உறைவிடம்"ன்னு பொருள். காரக்கோரம்ன்னா "கருப்பு சரலைகள்"ன்னு பொருள். இந்த மோதல்ல தான் திபெத்தியன் பீடபூமியும் உருவாச்சு. உலகத்தின் கூரைன்னு சொல்லக்கூடிய அளவுக்கு திபெத்தியன் பீடம் மூணு மைல் உயரம். இப்படி மூணு மைல் உயரத்துக்கு பூமி கிளம்பும் போது  கீழ இருந்து பிச்சிகிட்டு கிளம்பிய ஆறுகள் தான் இண்டஸ் அதோட கிளைகள் அப்பறம் கங்கையும் அதன் கிளைகளும். பூமியோட மேல் ஓடு சுமார் 30ல இருந்து 50கிலோமீட்டர் தடிமன் இருக்கும். பூமி இவ்வளவு பெருசா பிளந்துகிட்ட காரணத்தால கனிமவளம் இந்த ரெண்டு ஆறு வழியாவும் இந்த துணை கண்டத்தோட வடக்குலேயும் வடமேற்க்குலேயும் பாய்ஞ்சு அந்த பூமி முழுக்க வளமிக்கதா ஆகிடுச்சி.இண்டஸ் நதி ஓடுன படுகைகள்ல தங்க மண் பரவி கிடந்ததுன்னு சொல்றாங்க.இண்டஸ் நதிக்கு சிந்து அப்படின்ற சமஸ்கிரத பேர்தான் இயற்பெயர். சிந்துன்னா "அதிர்ந்து அசையும் பெரும் நதி அல்லது கடல் அல்லது நீராதாரம்"ன்னு பொருள்.

சரி இந்தியா இப்போ ரெடி ஆகிடுச்சி. இதுல இந்தியர்கள் எப்போ தோன்றுனாங்க ?
சுமார் சிந்து நதி பாய ஆரம்பிச்சு நாலைரை கோடி வருஷதுக்கப்பரம் தான் மனிதனோட நடமாட்டம் இந்திய துணை  கண்டத்துல ஆரம்பிச்சது.
எல்லாரும் சொல்றா மாதிரி நாமும் மனிதர்கள் குரங்குல இருந்து வந்தாங்கன்னு தான் சொல்ல போறோம். இல்லன்னா இவ்ளோ வாலுத்தனம் நமக்கு இருக்கிறத நம்மால ஜஸ்டிபை பண்ண முடியாது அப்படின்றது ஒரு பக்கம் இருந்தாலும் மரபணுக்களும் அதையே சொல்றதால நாம அதைதான் ஒத்துக்கணும்.
இந்த மண்ல மனுஷங்க தோன்றியது பற்றி இன்னைய இந்தியர்களின் மக்கள் தொகை அளவுக்கு ஏகப்பட்ட கருத்திருக்குங்க. இதுக்கு அடிப்படை எதுன்னா, கிடைக்கும் தொல்பொருள் ஆதாரம். இதுவரைக்கும் கிடைச்சது தோண்டுனதை வச்சி தான் எல்லாருமே ஒரு கருத்துக்கு வராங்க. ஒவ்வொரு வாட்டி புதுசா எதாவது கிடைக்கும் போது முன்னாடி சொன்ன விஷயம் அவுட் டேடட் ஆகிடும்.
ஆனா முழுசா பொய் ஆகாது. அது ஒரு டைம் லைன்ல போய் உக்காந்துக்கும். ஏன்னா எல்லாமே உண்மைதான்.

மனுஷங்க இந்தியாவுல சுத்தி திரிஞ்சி வேட்டையாடுறதுக்கு முன்னாடி அவங்களோட க்ளோஸ் ரிலேடிவ்ஸான Bipedals அதாவது ரெண்டு கால்ல நிக்கிற குரங்கினங்கள் தான் இங்க பெரிய லெவல்ல ஆட்சி புரிஞ்சிருக்காங்க. Planet  of  the  Apes. நம்ப முன்னோர்களை ஹோமினிட்கள் அப்படின்னு சொல்றாங்க ஹிஸ்டரி வாத்திங்க. ஹோமோ அப்படினாலே பழைய லத்தீன்ல மனிதன் அப்படின்னு தான் பொருள்.
இன்னைய உராங்குட்டானுக்கு முன்னாடி இங்க நம்ம மத்திய இந்தியாவுல இருந்த நம்ம தூரத்து சொந்த முன்னோர்கள் பேரு "சிவபிதகாஸ்". இந்த சிவபிதகாஸ் இந்தியாவின் வடக்கு அரணா ஓடுற ஷிவாலிக் மலைகள்ல சுத்தி திரிஞ்சதுக்கான ஆதாரங்கள் இருக்கு. சிவபிதகாஸ் இன்டிகஸ் என்னும் வகை சுமார் 22
லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது. இதுகளோட தாடை அமைப்பு மனிதர்களோட ரொம்ப ஒத்து போனது. 
அப்பறம் 19 லட்சம் ஆண்களுக்கு முன்னால் முதல் பழம்கற்கால மனிதர்களின் தடயங்கள் சிந்து நதி பக்கம் இன்றைய  பாகிஸ்தான்ல 1983ல ரிவாத் அப்படின்ற எடத்துல  கிடைச்சது.  இது தான் நமக்கு தெரிஞ்சு இந்தியாவில முதல் மனிதனின் அடையாளம்.இவங்கள ரிவாத்தியன் மக்கள் அப்படின்றாங்க ஆராய்ச்சியாளர்கள்.
ரிவாத்தியர்களுக்கு அப்பறம் 14 லட்சம் ஆண்டுகள் கழிச்சி வாழ்ந்த மனிதர்களின் தடையங்கள் பாகிஸ்தான்ல இருக்கிற சோஆன் நதி படுகைல 1936ல கிடைக்கிறது. ரிவாதியர்களை பத்தி நமக்கு தெரியுற வரை சோஆனியர்களை  தான் ஆதி சிந்து மனிதர்களாக நாம நினைச்சோம். இந்த  சோஆனியர்கள் ஈட்டி, கோடாரி போன்ற கல் ஆயுதங்களை பயன்படுத்தி இருப்பது தெரியுது. நமக்கு இதுவரைக்கும் தெரிஞ்ச முதல் நவீன மனிதர்கள் இவங்க 
ஆனா இதெல்லாம் ரொம்ப நாள் நிலைக்கலை.
டோபா பேரழிவு 
இந்தோனேஷியாவின் சுமத்ராவுல இப்போ இருக்குற டோபா ஏரி இருக்கும் இடத்துல இருந்த எரிமலை வெடிச்சு நெருப்பை கக்கியதில உலகமே வேற மாதிரி ஆகிடுச்சி. டோபா ஏரியே கடல் மாதிரி இருக்கும்ங்க. 100 கிலோமீட்டர் நீளம் 35 கிலோமீட்டர் அகலம்.
74,000 வருஷத்துக்கு முன்னாடி இந்த எரிமலை வெடிச்சதுல மத்திய இந்தியாவுல உள்ள காடுகள் எல்லாம் அழிஞ்சி போச்சி. ஒரு உயிரினம் கூட இல்லை. இந்திய பெருங்கடல் வங்காள விரிகுடா தெற்கு சீன கடல் எல்லாம் வெறும் சம்பலா தான் இருந்ததாம். அதோட சாம்பல் படிமங்கள் இன்னும் இந்த கடல்களில் கிடைக்குதாம்.


இந்த Super  Volcano eruption எரிமலை வெடிப்பு 800 கன சதுர கிலோமீட்டர்கள் சாம்பலை கக்கியது. இந்த சாம்பல் ஆறு வருஷத்துக்கு சூரியனோட வெளிச்சத்த இந்த பூமி மேல பட விடாம பண்ணியதில், பூமி மீண்டும் ஒரு ஐஸ் ஏஜுக்கு போய்டுச்சி. இந்த ஐஸ் ஏஜ் 1800 வருடங்கள் நீடிச்சது. இதுல மனித இனம் கிட்டத்தட்ட அழிஞ்சே போச்சுன்னு சொல்றாங்க.

அடுத்த பகுதில நாம கலாச்சாரத்தின் ஆரம்பத்தை பார்க்க போறோம். சிந்து சமவெளி கலாச்சாரம் மற்றும் அதற்கு முன்னான திராவிட கலாச்சாரம்.

Thursday 20 August 2015

சங்கிலி

சங்கிலி
சி.மோ. சுந்தரம்
விஷயத்த கேட்டு கொஞ்சம் ஆடி போயிட்டேன். அந்த அதிகாலையில் பொன்னார் வீடு நெருங்க நெருங்க ஒரு மாதிரியாக இருந்தது எனக்கு. எதோ தொண்டை எல்லாம் அடைக்கிற மாதிரி. வீடே அமைதியா இருந்தது. ராமன் அண்ணன் தான் வந்து கதவ திறந்தாரு. உள்ளே ஒரு பெண்ணின் விசும்பலும் ஒரு ஆணின் அரற்றலும் கேட்டுச்சி. உள்ளே தனலட்சுமி அக்கா வாயில முந்தானைய தினிச்சிகிட்டு விசும்பிகிட்டு இருந்தது. என்னை பார்த்ததும் அழுகை கூடுச்சி. உள்ளே சங்கரன் தலையை குனிஞ்சமேனிக்கு உக்காந்து இருந்தான். தலையை அப்படியும் இப்படியும் ஆட்டிகிட்டு இருந்தான். தலையெல்லாம் மண்ணும் தும்புமா இருந்தது. கையை ஒரு கைலியால கட்டி இன்னொரு முனையை ஜன்னலில் கட்டி வச்சிருந்தாங்க. அவன் என்னமோ சொல்லி அரற்றிகிட்டு இருந்தான்.
தனலட்சுமி அக்கா வாய்விட்டு அழுதுச்சி,
"அப்பாவும் போயிட்டாரு, இனி நம்ம நாதியத்து போயிடுவோம்னு சித்தம் கலங்கிட்டானே என் தம்பி ...அய்யோ.."
பெருங்குரலில் தனலட்சுமி அழுதது.
தனலட்சுமி அக்காவோட கணவர் பொன்னார் அதட்டினார், "த! சும்மா ஒப்பாரி வச்சிக்கிட்டு. மச்சான் எதோ அதிர்ச்சில இருக்காபுல. எல்லாம் சரியாகிடும்"
தனலட்சுமி அக்காவோட பொண்ணு சித்ரா ஓராம உக்காந்து இருந்தது.
"ஏம்மா! நீ காலேஜ் கிளம்புல?'' என்றேன். அந்த பிள்ளை ஆறரை மணிக்கே தயாராகி ரோட்டுக்கு போய்டும் காலேஜ் பஸ் பிடிக்க.
கொஞ்சம் பிதிறி போய் இருந்தது, "இல்லை மாமா"என்றது. வீடே ரெண்டு பட்டு போய் கிடந்தது.
"என்னதான் ஆச்சு ?" இன்னும் தெளிவே இல்லாம கேட்டேன்.
தனலட்சுமி அக்கா சொன்னது, "நேத்து  ராத்திரி  மதில் சுவது மேல ஏறி நின்னுகிட்டு கத்தி இருக்கான். அக்கபக்கம் ஆளுங்க வந்து சொன்னாங்க. போலீஸ் வேற போன் போட்டுட்டாங்க. அப்பறம் நாங்க போயி கூட்டியாந்தோம்."
மூக்கை உறிஞ்சிவிட்டு தொடர்ந்தாள், "இங்க கூட்டியாந்து வச்சிக்கலாம்னு பார்த்தா... வயசு புள்ள வூட்ல இருக்கு" குரல் உடைந்து அழுதாள், "யான் தம்பி இப்பிடி சித்தம் கலங்கி போவான்னு நான் நினைக்கலியே... அந்த சிரிக்கிய என்னைக்கி கட்டிகிட்டு வந்தானோ அன்னைக்கே அவனுக்கு வாழ்க்க சீர் கொலைஞ்சி போச்சு"
ராமன் அண்ணன் என்னை வெளியே வரும்படி சைகை செய்தார். நானும் வெளியே போக அவர் தொண்டையை செருமி கொண்டு ஆரம்பித்தார், " எப்பிடி நாடகம் நடிக்கிதுங்க பாரு... இதுங்க மட்டும் அவனை நாதி இல்லாம விட்டில்லாம போனா, அவன் இப்பிடியா பைத்தியம் புடிச்சி நிப்பான். ச்சே ... மனசு ஒரு மாதிரி பண்ணுதுப்பா. சின்ன வயசுல இருந்து பார்த்த பய ..இப்பிடி சித்தம் கலங்கி நிப்பான்னு நினைக்கலை.. ஆயி அப்பன் இருந்த வரைக்கும் தாங்கு தாங்குன்னு தாங்கினாங்க. கட்டுனவளும் வுட்டுடுட்டு ஓடிட்டா. இப்போ ஆயி அப்பனும் இல்லைன்னு தெரிஞ்சதும் கலங்கி போய்ட்டான்."
உண்மைதான் இப்படி ஓரத்தனோட எந்த பெண்ணும் குடித்தனம் பண்ணமாட்டா. நல்ல படிப்பு சங்கரனுக்கு, ஆனா வேலைக்கு போனதில்லை. அம்மா செல்லம். ஒரே பையன்னு பொத்தி பொத்தி வச்சிட்டாங்க. அப்பா அம்மா ரெண்டு பெரும் கவர்மெண்ட்டு வேலை செஞ்சவங்க. பென்ஷன் வந்துச்சி. சொந்த வீடு வாசல். புள்ளைய வேலைவெட்டிக்கு போன்னு சொல்லல.  ஒத்த புள்ளைன்னு பெரியம்மாவும் பெரியாப்பாவும் அப்படி செல்லம் குடுத்தாங்க. ஒரு வயசுக்கு மேல அவன் வேலை வெட்டி இல்லாம இருக்குறத அவங்களே சகிச்சிக்கல .. "ஒரு கல்யாணம் பண்ணினா  சரியா பூடும்"னு தான் பாலாவ கல்யாணம் பண்ணி வச்சாங்க. பாலாவுக்கும் சங்கரனுக்கும் ஒரு கொழந்த பொறந்துச்சி. ஆனா சங்கரன் வேலைக்கி எல்லாம் போற மாதிரி தெரியல. பாலா எவ்ளோ சொல்லி பாத்திச்சி. எப்பவும் சண்ட நடக்கும். பெரியம்மாவும் பெரியப்பாவும் சங்கரன் பக்கம் சேந்துக்குவாங்க, பத்தாததுக்கு தனலட்சுமி அக்காவ வேற கூட்டிடுவாங்க. தனலட்சுமி அக்கா பக்கத்து தெருல தான் இருந்தது. தனலட்சுமி அக்காவோட பேராச எல்லாருக்குமே தெரிஞ்சது தான். பாலாவோட நகை வரைக்கும் அதுகிட்ட தான் இருந்தது, "நான் லாக்கர்ல வக்கிறேன்.. இங்க தொறந்த வூட்லையா போட்டு வைப்ப?"ன்னு சொல்லி வாங்கிட்டு போச்சு அவ்ளோதான். ஏதாவது விசேஷம்னா தனலட்சுமி அக்கா பாலாவோட நகைய போட்டுக்கிட்டு வலம் வரும். எந்த பொண்ணு தான் பொறுத்துக்குவா?  "என் நகை எனக்கு வேணும்"னு கேட்ட பொண்ண அம்மா வூட்டுக்கு அனுப்பிட்டாங்க. பஞ்சாயத்து அப்பப்போ நடந்துச்சி. பாலாவோட வீட்ல அத அனுப்பமாட்டாங்கன்னு சொல்லிட்டாங்க. அங்க போயி வேலைக்கு போன பொண்ணுக்கு யாரை புடிச்சி போவ, அது அப்படியே போய்டுச்சி. புள்ளை ஒத்தையா நின்னுட்டானேன்னு இன்னும் சவரட்ச்சனா செஞ்சாங்க சங்கரனுக்கு.
பெரியம்மா சாஞ்சி, எடுத்து போட்டப்பதான் சங்கரன் வேற ஆளா தெரிஞ்சான். அப்பிடி அழுதான். சங்கரன் ரொம்ப பயிந்து போய்ட்டான்.  
பெரியப்பாவுக்கு முன்னாடியே கைக்கால் உழுந்துதான் கெடந்தாரு. பெரியப்பாவ சங்கரன் தான் பாத்துகிட்டான். பெரியம்மாவோட பேமிலி பென்ஷன் பெரியப்பாவுக்கு வந்துச்சி அவரும் பென்ஷனர் தான். காசுக்கு மொடை இல்லாம இருந்தது.
"ஏதாவது வேலைக்கு போவனும்ண்ண" என்பான், பொறவு அவனே யோசிச்சிட்டு "அப்பாவ யாரு பாத்துக்குவா?"ன்னுட்டு விடுவிடுன்னு நடைய கட்டிடுவான். பெரியாப்பவும் போயிட்டாரு. அன்னைக்கி சங்கரன் வானத்த பாத்து அழுதுகிட்டு நின்னான். பெருசா கத்தல. வெறும் விசும்பல், ஆனா பாத்தவங்கள உலுக்கிடும் விசும்பல். எழவு வூட்ல அவனுக்கு தான் சனம் அழுதுச்சி. சங்கரன எனக்கு பெருசா பிடிக்காது, ஆனா அன்னைக்கி எனக்கே லேசா கண்ணு கலங்கிடுச்சி. ரொம்ப பாவமா தெரிஞ்சான். அப்பன் ஆயி பண்ணின தப்பு. பையனை பொத்தி பொத்தி வளர்த்து 34 வயசுல கொழந்த மாதிரி தனியா இந்த ஒலகத்த எதிர் கொள்ள முடியாம கலங்கி போய் நின்னான். சாவு முடிஞ்சி மூனாம் நாலு இப்படி கொலைஞ்சி நிப்பான்னு நெனைக்கல.
ராமன் அண்ணன் தான் பேச்சை ஆரம்பிச்சாரு, "ஏம்ப்பா! என்ன தான் பண்றத.. டாக்டர் கீக்ட்டர் கிட்டு கூட்டி போவோமா? "
அதுக்குள்ள அக்கம் பக்கமுள்ள ஆளுங்களும் சொந்தக்காரங்களும் வர ஆரம்பிச்சிட்டாங்க. கொஞ்சம் கூச்சல் அதிகமாவ, சங்கரன் கத்த ஆரம்பிச்சிட்டான். கைலியால கட்டியிருந்து கையை அவுக்க முயற்சி பண்ணினான். ஆளுங்க புடிக்க இன்னும் முண்ட ஆரம்பிச்சிட்டான். சுத்தி இருந்தவங்க அவன மொத்தமா பைத்தியக்காரனா ஆக்கிகிட்டு இருந்தாங்க.
"அவுத்து வுடு நான் போறேன், அவுத்து வுடு நான் போறேன்" அவனோட போராட்டத்துக்கு பதில் வழக்கம் போல அடியாதான் விழுந்தது.
"அண்ண வேணாம்ண்ண" என் தடைகள மீறி அவனுக்கு அடி விழுந்தது.
"விடுங்க தம்பி ! நாலு போட்டா தான் அடங்குவான். நேத்தி மதில் சொவுத்துல துணியில்லாம நின்னிருக்கான். என் வூட்டுல வயசு பொண்ணுங்க இருக்கு என் பொஞ்சாதி இருக்கு. திமிர் கொண்ட நாயீ"
எனக்கு கத்த வேணும்னு தோணுச்சி.
"டேய் ! தெரிஞ்சாடா செஞ்சான் அவன்" எனக்குள்ளேயே கத்தினேன். வெளியே கத்த முடியாது. கத்தினால் என்னையும் சங்கரனாக்க இவங்களுக்கு அதிக நேரம் தேவைப்படாது. நானும் சம்சாரியின் அந்தஸ்த்தோட இருந்தாவனும்.
"அண்ண ! பொறுமண்ண. அவன் சொயநெனைவு இல்லாம இருக்கான். கொழந்த மாதிரி. இருங்கண்ண"
சங்கரனின் முழு நிர்வாணத்த பார்த்த இன்னொரு பொண்டாட்டியின் புருஷன் கத்தினாரு, "கொண்டு போய் பைத்தியக்கார ஆஸ்பத்திரில சேருங்கய்யா .. ஊருக்குள்ள வச்சிக்கிட்டு….  இவனுத பாக்கத்தான் நாங்க இருக்கோமா ?"
ஊரு பிரசிடென்ட்டு வந்துட்டாரு. வழக்கமான விசாரிப்புங்களுக்கு பொறவு, "ந்தா பாருங்க ! அவன் புத்தி பேதலிச்சவன், சொயநெனைவு இல்லாம செய்றான், எல்லாம் சரிதான்... ஆனா ஒன்னு கெடக்க ஒன்னு செஞ்சிட்டானா அப்பறம் வான்னா வராது
அக்கா தந்த காப்பிய வாங்கி குடிச்சிட்டு தொடர்ந்தாரு, "வீட்டோட வச்சி பாத்துகிறதா இருந்தா... யோக்கியமா கட்டி வையுங்க. வைத்தியம் பாருங்க. வெளியில யாரும் தொல்லைக்கி ஆளாவ கூடாது. பாத்துக்குங்க"
தனலட்சுமி அக்கா விக்கித்து நின்றாள் , "அய்யா தப்பா நெனைக்க கூடாதுங்க"
"சொல்லும்மா"
"நானும் வயசு பொண்ண வீட்ல வச்சிருக்கேன். ஒன்னுகெடக்க ஒன்னு ஆச்சின்னா ..."
பொன்னார் செருமினார்," இத சொல்ல பயமா தான் இருக்கு. அவஞ்சொத்து மட்டும் வேணும், சித்தம் கொலஞ்சவன பாக்க துப்பில்லன்னு சொல்லும் சனம். எனக்கு ஒரு பொண்ணு இருக்கு. இப்பிடி இவன வச்சிக்கிட்டு நாளைக்கி கல்யாணம் காட்சின்னா எவன் வருவான் பொண்ணெடுக்க? இதெல்லாம் மனசுல வச்சிக்கிட்டு ஒரு முடிவெடுங்க... உங்க வீட்ல இருந்தா என்ன பண்ணுவீங்களோ, அத சொல்லுங்க"  
பிரசிடென்ட்டு தோரணையா எல்லாரையும் பாத்தாரு, "பொன்னாரு சொல்றதும் சரிதான். புத்தி பேதலிச்சவன் என்னைக்கி சொகமாயிருக்கான்? சரி ! ஒரு நல்ல ஆஸ்பத்திரில சேத்து உடுங்க"
ராமன் அண்ண பேச்ச ஆரம்பிச்சாரு, "எந்த ஆஸ்பத்திரிலேயும் காலா காலத்துக்கு வச்சிக்க மாட்டான். அவனுக்கு என்ன சொத்தா கொற? அவன் ஆயி அப்பன் அவ்ளோ சேத்து வச்சிருக்காங்க. கவர்மெண்ட்டு ஆஸ்பத்திரின்னு கொண்டு போவாம, நல்ல தனியார் ஆஸ்பத்திரில வச்சி பாக்க சொல்லுங்க"  
என் பங்குக்கு நான் சொன்னே, "இன்னைக்கி தேதில இது ஒன்னும் தீர்க்க முடியாத நோவு இல்ல. காசு பணம் கட்டி பாத்தம்னா, சரியா போய்டும். இன்னும் இப்பிடி சங்கிலி போட்டு எல்லாம் கட்டிவக்கிறது மொற இல்ல"
பொன்னாரு என்னை வெறித்து பார்த்தாரு, "பட்டாளத்தாரு தம்பி! ஒங்களுக்கும் பங்காளி பாசம் இருக்கிறது எல்லாம் உண்மதான்... யான் உங்க பங்காளி மக்கள நீங்களே வச்சி பாருங்களேன்"
ப்ரெசிடெண்ட்டு தொண்டையை செருமிவிட்டு, "சரி பொன்னாரு! சங்கரனுக்கு சேரவேண்டிய சொத்த முழு மனசா பட்டாளத்தாருக்கு குடுங்க. பட்டாளத்தாரு பாத்துக்க போறாரு... என்ன பட்டாளத்தாரே நாஞ்சொல்றது?" என்றார் என்னை பார்த்து.
பொன்னாரு அவசரமா இடைமறித்து, "அது தானய்யா நானும் சொல்றேன், சொத்த ஆள பாத்தியத எங்களுக்கு உண்டுன்னா, எம்மச்சான பாத்துக்குற கடமையும் இருக்கு. நாங்க பாத்துக்குறோம் ... லட்சமில்ல கோடி ரூவா அவட்டுமே."
ராமன் அண்ண என்னை பாத்து நக்கலா சிரிச்சாப்புல. நானும் சிரிச்சேன் ஆனா விரக்தி தான் மண்டி கெடந்தது.
பேச்சு வார்த்த ரொம்ப நேரம் நடந்தது. இடைல அப்பப்போ முண்டுன சங்கரன இளைஞர் நற்பணி மன்றம் அமுக்கியது. கடைசியா தனியார் ஆஸ்பத்திரிக்கி போனை போட்டு வண்டி வந்தது. சங்கரனுக்கு ஊசி போட்டு கொண்டு போனாங்க. கூடவே நானு, பொன்னாரு, தனலட்சுமி அக்கா இன்னும் ரெண்டு மூனு இளந்தாடி பசங்க போனோம்.   
ஆஸ்பத்திரில டாக்டர் தெளிவா சொல்லிட்டாரு, சங்கரனுக்கு ட்ரீட்மன்ட் மட்டும் தான் தரமுடியும். ஒரு மாசத்துக்கு அட்மிட் பண்ணி வைத்தியம் பாக்கலாம்னு. ஒரு மாசம் சங்கரனுக்கு செலவே ஏகமாச்சு. கொஞ்சம் தேவலாம் போல இருந்தான் சங்கரன். ஆனா பேச்சு ரொம்ப கொழரிச்சி. அஸ்பத்திரிலேயே தனலட்சுமி அக்கா தனியார் காப்பகத்த பத்தி விசாரிச்சு வச்சிருந்தது. சங்கரன சேக்கணும்னு.
"வருசத்திற்கு ஒரு லட்சம் கட்டணுமாம். வேணும்ன்குற போது போய் பாத்துக்கலாமாம். எல்லா சவரட்ச்சனையும் செய்வாங்களாம்" தனலட்சுமி அக்கா எங்கேயோ பாத்துகிட்டு சொன்னுச்சி. நான் வூட்டுக்குள்ள பாத்தேன், சங்கரன் கட்டிலில் காலை நீட்டி போட்டுக்கிட்டு தலையை ஆட்டிகிட்டு இருந்தான். ஒரு கயிறு மணிக்கட்டில் கட்டி இருந்தது, சங்கிலி கட்டிலோடு இணைக்கப்பட்டிருந்தது.
"ஏங்க்கா இன்னும் கட்டி வச்சிருக்கீங்க?"
"லூசுப்பய எப்போ எதுவும் செய்வான்னு தெரிய மாட்டேன்து."
நான் தனலட்சுமி அக்காவ பார்த்தேன். குற்ற உணர்ச்சியோட தலைய தொங்க போட்டுக்கிட்டு சொல்லிச்சி, "சித்ரா ரொம்ப பயப்படுதுப்பா"
நான் கிளம்பினேன், அக்கா நிறுத்தி சொல்லிச்சி, "நாளைக்கி கொண்டு போயி உடுலாம்னு இருக்கோம். இங்க எதுவும் நல்ல ஹோம் இல்ல. அதான் சென்னைல பாத்திருக்கோம். காசுக்கு தான்."
"சரிக்கா " நான் கிளம்பினேன்.
ரெண்டு நாள் கழிச்சி பொன்னார் வீட்ல ஒரே களேபரம். நான் போனேன் ஊரே கூடி கிடந்தது. தனலட்சுமி அக்கா பெருங்குரலில் அழுது கொண்டிருந்தது. பக்கத்தில் ராமன் அண்ண நின்னுகிட்டு இருந்தார்.
கேட்டேன், "என்னண்ண ஆச்சு?"
"கூட்டிகிட்டு போவும் போது குதிச்சி ஓடிட்டானாம். தேடுனாங்கலாம் கெடைக்கலையாம். போலீஸ்ல கம்ப்ளைன்ட் குடுத்துட்டு வந்திருக்காங்க" ராமன் அண்ணணோட கொரல்ல கொஞ்சம் கூட நம்பிக்கை இல்ல. நான் சட்டென்று திரும்பி வீட்டுக்கு வந்துட்டேன்.
மெட்ராசுக்கு ஒரு நாலு மாசம் கழிச்சி பொண்டாட்டி புள்ளைங்க கூட போயிருந்தோம். சென்ட்ரல் ரயிலடி பக்கம் ஒருத்தன் ரொம்ப தாடி, முடி சடை மண்டி கிடந்தான். பழைய காக்கி பேண்ட்டு போட்டிருந்தான். மேல் சட்டை இல்ல.
நான் எங்க வீட்ல அவளை நிக்க சொல்லிட்டு போய் ஒரு இட்டிலி பொட்டலம் வாங்கிகிட்டு வந்து குடுத்தேன், வாங்கிகிட்டான்.
திரும்பி அவனை பாத்துகிட்டே வந்தேன். என் வீட்டுல கேட்டாப்புல, "என்னங்க அப்பிடி பாக்குறீங்க ?"
"நம்ம சங்கரன் சாடைல இருக்கான் இல்ல?"
"ச்சே.. இல்லீங்க. மாமா நல்லா செவப்பா இருப்பாங்க, அதில்லாம அவங்க போகும் போது லுங்கி இல்ல கட்டிக்கிட்டு போனாங்க. அவங்களா இருக்காது" எனக்கு கொஞ்சம் லேசாக கண்கலங்கியது. திரும்பி திரும்பி பாத்துகிட்டே நடந்தேன். உண்மையில் நானும் அவனை வச்சு சோறு போட தயங்கிட்டேன். யாரையும் குத்தம் சொல்ல நான் அருகத இல்லாம இருந்தேன். எல்லார போலையும் நானும் வேடிக்கைத்தான் பாத்தேன். சங்கிலி சங்கரனுக்கு மட்டுமில்ல எனக்கு இணைப்பட்டிருந்துச்சி.
 இது சங்கரனா இருக்கனும்னும் நெனச்சேன் இருக்க கூடாதுன்னும் நெனச்சேன்.